Tuesday, 5 March 2013

பிரார்த்தனை


கடவுளைக்
கைது செய்து வைத்திருந்தேன்
எனக்கு மட்டுமே உரியவர்
கேட்டதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்

அவர் பலமுறை ஏமாற்றியதை
யாரிடமும் சொன்னதில்லை
எனது அதிகாரத் தோரணை
குறைந்துவிடும்

என்னைப் போன்ற மத்திய வர்க்கத்தினர்
வீட்டில் தான் அவருக்கென்று தனியிடம் உண்டு
ஏழைகள் கோயிலில் தான் அவரைப் பார்க்க வேண்டும்
பணக்காரர்களோ ஊருக்கு ஊர் அவருக்கென்று
கோயில் கட்டி வைத்து விடுகிறார்கள்
முதல் மரியாதையும் பெற்று விடுகிறார்கள்


அவரை வைத்துக் கொண்டும்
பிச்சைக்காரனாக இருப்பதை விட
அவர் இல்லாமலேயே போகட்டும்

அவரிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை
என்னால் அவருக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை
பிறகெதற்கு
அவரை நான் வணங்குவதும்
அவர் எனக்கு இணங்குவதும்
அவருக்கு இருக்கின்றன எத்தனையோ சிறைகள்
இருந்து கொள்ளட்டுமே ஏதாவது ஒன்றில்..என்னமோ தோன்றியது எனக்கு இன்று
கடவுளை
விடுதலை செய்து விட்டேன்