Sunday, 25 February 2018

கிணற்றில் விழுந்த பாம்பு

ஊரெங்கும் உலகெங்கும்
சுற்றிச் சுற்றி
அனுபவங்களை
விழுங்கத் துடித்த பாம்பு
பசித்த நேரத்தில்
தவளையைத் துரத்திப்போய்
கிணற்றில் விழுந்துவிட்டது

அழுக்கடைந்த கிணற்றின்
பாழடைந்த இடுக்குகளில்
தகாத உணவுகளைத் தின்று
விரும்பாத வாழ்வில் 
வழுக்கி வழுக்கி
விழுந்து கொண்டே இருக்கிறது
கிணற்றில்

கதிரொளி தந்த
கனவுகள் போதுமா?
அவற்றில் ஏறி
வெளியில் வருமா

யோசித்துத் தவம் இருக்கிறது
கிணற்றின் விளிம்பை
நோக்கிக் கொண்டே...

இருளெனும் வரம்

அலைந்து களைத்து
விழுந்துறங்க எத்தனிக்கையில்
எனக்குத் தேவைப்படுகிறது
இருள்

கலைஞர்களும் கவிஞர்களும்
இருள்காட்டிப் பயமுறுத்திவிட்டனர்
ஒளியைப் போலவே தானே
இருளும்

எனது 
கள்ளத்தனங்களை ஒளித்துவைக்க
கவலைகளைப் பயங்களைச்
சுயநலங்களைப் பூட்டிவைக்க,

எனது வேஷங்களின்
பூச்சுக்களைப் பாதுகாக்க..

என்னால் வஞ்சிக்கப்பட்டவர்களின்
முகம்
அதில் பதிந்திருக்கிறது
என்னால் கொலையுண்டவர்கள்
அதில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்
அடித்து நொறுக்கப்பட்ட 
எனது நல்லெண்ணங்கள்
அந்தக் கல்லறையில் மூழ்கிவிட்டன


இரவின் மடியிலிருந்து
இருட்குழந்தையை 
எடுத்துக்கொள்ளும் ஒளிவிளக்குகள்
அதைத் தங்கள் 
முதுகில் சுமந்து கொண்டிருக்கும்

ஒளிவெள்ளத்தில் மூழ்கிய 
எல்லோர் முதுகிலும்
வழிந்துகொண்டிருக்கும் அவமானங்கள்

நினைவினேலும் 
இருள் இருப்பது நல்லது
மீண்டும் அதன் கோரைப்பற்களில்
சிக்காதிருக்க

எல்லோருக்கும் தேவைப்படுவது
நேசமானது
மனிதராக நம்மை உணரவைப்பது
இருளெனும் ...வரம்

Tuesday, 29 November 2016

கோழிகள்

குஞ்சுகளைக் கண்டஞ்சும்
கோழிகள்
ஒன்றும் அறியாமல்
வழிதடுமாறிவிடும்
கழுகுகளின் பார்வையில் விழுந்து
கதை முடிந்துவிடும்

ஆனாலும்
நடைபழகுவது
தனியே இருப்பது
போராடுவது
எல்லாம்
குஞ்சுக்கும் தெரியவேண்டும்
அதற்குத் தனியே போயாக வேண்டும்

குஞ்சுகளைக் கண்டஞ்சும் கோழிகள்
குஞ்சுகளாயிருந்தவைதான்
அதற்கும் முன்
முட்டைக்குள் முடங்கியவை
ஓட்டை உடைத்ததும்
உலகின் ஒளியில்
கண்கூசியதே

கோழிகள் அறியும்
ஆனாலும்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன்குஞ்சு

கோழிக்கும் தெரியாது
குஞ்சுகளும் அறியாது
குஞ்சு எப்போது
கோழியாகிறது?

Friday, 16 September 2016

துடிப்பு

நீந்திக் கொண்டிருந்த காலம்
வளைந்தும் நெளிந்தும்
ஓடியும் துரத்தியும்
கொறித்தும், அரித்தும்
கழிந்தது

எவன் வீசிய வலையிலோ
சிக்கி, இழுபட்டு
நீருக்கும் மேல் மூச்சுத் திணறி
படகில் விழுந்து
ஐஸ் பெட்டியில்
சிற்றசைவில்
இன்னும் உயிரைப்
பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்

ஒரு

சிறு


மீன்

Tuesday, 12 April 2016

விழிக்கும் தருணம்


இருட்டுக்குள்
எங்கோ தலைக்குமேல்
தெரியும் வெளிச்சம்

மிக உயரமாகத் தெரிவது
கிணற்றின் விளிம்புச் சுவர்கள்
யாராவது தண்ணீர் இறைக்கும் போது
அவர்களின் தலை

தண்ணீரும் பாசியும் பூச்சிகளும்
சமமாகத் தெரியும்

மூழ்குவதன் எல்லை
கெட்டித் தரையும்
அதில் விரித்த மண்ணும்

ஒரே பயம் பாம்புகள்
அவை பெரும்பாலும்
கிண்ற்றுக்கு வெளியே
வசிக்கின்றன

எப்போதாவது
தப்பித் தவறி
இறைக்கும் வாளியில்
மேல் சென்று
பரந்த வெளியில்
விழுந்து விடுவதும் உண்டு

மிகவும் அபூர்வமான
அத்தருணத்தில்
உலகம்
எல்லைகளற்றதும்
தானறியாததும்
என்று
வியக்கும் தவளையின்
கண்கள்

Wednesday, 30 December 2015

நான் காணும் உலகம்

சிறு கண்ணனைப் போலவே
இந்தப் பூமியைப்
பேரண்டத்தை விழுங்கி
என் உள்ளங்கையில்
உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்
ஒரு கவிஞன் போல,
விஞ்ஞானி போல

சில நேரங்களில்
பூமியாகவோ
பேரண்டமாகவோ
ஆகிவிட விரும்புவதும் உண்டு
ஒரு துறவி போல.

எனக்கு அகங்காரமோ
பேராசையோ
உலகமும் அண்டமும்
உள்ளது உள்ளபடியே

பனித்துளியில் கடல் தெரிந்தாலும்
கடலிலிருந்து வந்ததே
பனித்துளி

Tuesday, 15 December 2015

நாம் யார்க்கும் குடியல்லேம்

எண்ணிலா அண்டம் இயற்கையில் எழுந்த
        இயல்பினை கண்டுபி டித்தோம்
    ஏகன னேகன் என்றெலாம் உரைத்த
        எவரது புளுகைம றுத்தோம்
வெண்ணிலா மீன்கள் செங்கதிர் உலவும்
        வீதியை அளந்துமு டித்தோம்
    விரைகிற செயற்கைக் கோள்களை அனுப்பி
        சனியையும் புகைப்படம் பிடித்தோம்

ஆழ்கடல் இறங்கி திமிங்கலம் சுறாமீன்
        கோரலின் சாரம றிந்தோம்
     ஆப்பிரிக்காவில் மனித குலத்தின்
        ஆரம்ப வாழ்வைப் புரிந்தோம்
பாழுடல் என்று ஒதுக்கிய உடலின்
        பாகமும் வேலையும் குறித்தோம்
     பவித்திர மான கடவுளின் தொண்டர்
        பார்க்கிற வகையில் விரித்தோம்

தத்துவம் என்று பித்தர்கள் பேசும்
        சாரமில் கதைதோற் கடித்தோம்
     தாமுயர் வென்று சாஸ்திரம் காட்டும்
        சழக்கரும் நடுங்கிட விழித்தோம்
மூத்தவர் சொன்ன முறைகளில் அடக்கு
        முறைகளை மூச்சொடெ திர்த்தோம்
    முன்னரோ இன்றொ சொன்னதைக் குறள்போல்
        சான்றுடன் பகுத்த றிந்தோம்