Wednesday, 30 December 2009

சிறு(திரு)வடி சரணம்


ஒரு சிறுமியின் சிரிப்பு
மிக அழகானது
அதன் ஓசை நம்மனதில்
இழுத்துவரும் எதிர்காலம்
பனிபடர்ந்தது
எனவே
சிறுமியோ இளம்பெண்ணோ சிர்த்தால்
பூக்களை நினைத்துக் கொள்ளலாம்

ஒரு சிறுமியின்/இளம்பெண்ணின்
உடல் எழிலானது
ஒரு பையனின் உடல்போலவே……
அதன் மென்மையில் உங்கள்
நினைவுத் தென்றலின்
இசைகேட்கலாம்

ஒரு சிறுமியின்/சிறுவனின் மனம்
நட்சத்திரங்கள் போல்
கேள்விகளால் ஆனது
உங்கள் மனத்திரையை விலக்கினால்
உலகையே ஒளியாகப் பார்க்கலாம்
பெண்ணின் துயர்


வாசிக்கப் படாத
அவளது வரிகள் காத்திருக்கின்றன
மனதில் ஒரு பெருந்தேராக

சின்னக் குழந்தையின்
சிரிப்பு அல்லது
கணவனின் நேசக்குரல்
எப்போதாவது கசியவிடும்
கண்ணீரில்
கொஞ்சம் வழுக்கி நகரும்

அலைந்து புரண்டு கொண்டிருக்கும்
நிலத்தடித் தணலின்
ஊற்றுக் கண்
திறந்தால்
தேரும் நகர்ந்துவிடும்
உலகும் எரிந்துவிடும்
என்றே
ஒருபோதும் திறவாதோ?

 
 
 

Saturday, 26 December 2009

அலங்காரம்


முன்னும் பின்னும்
கண்ணாடி
சிறு சலனத்தையும்
பலப்பலவாய்க் காட்டும்
எண்ணற்ற பிம்பங்கள்
எனக்கு மட்டுமே தெரியும்
நான் மேதைதான்

 
 
கடலின் மொழி


ஒவ்வொரு முறையும்
ஏதாவது சொல்ல வந்து
நான் கேட்க மறுப்பதால்
மீண்டும் சொல்லத்
தொடர்ந்து முயன்று வரும்
அலைகள்
ஒளியின் எல்லை


மாளிகைத் தோட்டங்களில்
வாள்களை மறைத்துவைத்து
கணவனின் பாடல்களுக்கு
இசையமைத்து
தெருவில் நின்று
வித்தைகாட்டும் பாவையர்
நிலவாக
வலம் வரலாம்

இடுப்பொடிபடும்
கருப்பாயி
வாயைத் திறக்கும்வரை

 
 
 
 
வறண்ட பாலைவனத்தின்
நீரற்ற பரப்பின் மீது
கிளைவிரித்துப் பரவும்
முட்செடி
அதன் கையலப் பட்டை இலையில்
விஷ முள்ளின் கீழே
ஒளிந்திருக்கும்
எப்போதோ வான்போட்ட
ஒரு பிச்சைக் காசென
இரு துளி ஈரம்
அதைத் தோண்டி எடுக்க
எத்தனிக்கும் வேறு வழியற்ற
எறும்பு
யாராவது வருவான்
உன்னையும் தேடி
பகிர்தல்

நான் என் இதயத்தைக்
கையில் எடுத்துக் கொண்டு
கூவிக்கூவி அழைக்கிறேன்
யார்கேட்டாலும் பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்

கவிதையென்றோ உளறல் என்றோ
காதலென்றோ வேறு என்னவென்றோ
பெயர் வைத்துக் கொள்ளலாம்
இழுத்து இழுத்துச் சொருகிக் கொள்ளும்
எல்லா வரையறைகளையும் தாண்டி

நீ செய்தது எல்லாம் சரியாகவே இருக்கட்டும்
நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்
அதனாலெல்லாம் என்னவாகிவிடப் போகிறது?

நான் மோசமாகவோ
நீ புண்ணியவானாகவோ இருக்கலாம்
காற்றோ எதுவோ இருக்கிறதே
நாம் பகிர்ந்து கொள்ள

Tuesday, 22 December 2009

தொலைந்த வரி

வாசிக்கப்படாத கவிதைகள்
என்னவாகின்றன?

யாருக்கும் தெரியாமல்
ஆழ்கடலில் பூக்கும் ‘கோரல் ரீஃப்’
போல் ஆழ்ந்துவிடும்
பின்
அழுகிக் கெட்டுக் காய்ந்த
பிணங்களைப் போலாகிவிடும்

நிலத்தடியில் மறைந்துபோகும்
வேர்கள்
சிலநேரம் துளிர்விடக்கூடும்
அடுத்த தலைமுறையின் நினைவுகளில்

Monday, 21 December 2009

ஊர்மணம்

மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியல்ல
மெல்ல தழுவிச் செல்லும் தென்றல் காற்றல்ல
நான் தினமும் பறித்துண்ணும் செம்பருத்தி மொக்கல்ல
சின்ன உறைக்கிணற்றின் உப்புத் தண்ணீரல்ல
வெள்ளிநுரை சுருண்டுவரும் கடல் அலையல்ல
காலையில் பனையோலையில் கிடைக்கும் பதனீரல்ல
ஓட்டைச் சிப்பியோ, கடற்கரைக் கரும்பொன்னோ
நடக்கக் கால்வலிக்கும் மணலோ அல்ல
அது வெற்று வார்த்தையுமல்ல, நிழலுமல்ல
எப்படிச் சொல்வேன் என் நகரத்து மகளிடம்?
உதற முடியாமல் என்னைத் தொடர்ந்துவரும்,
எல்லாம் சொன்ன பின்னும் நழுவிச் செல்லும்,
அதை

Saturday, 19 December 2009

விடை பெற்றுவிட்டோம் தோழர்களே

இனி யாருக்கும் உறுத்தாது
விதி பற்றிப் பேசலாம்
டாலரை அளக்கலாம்
நமக்கினி பயமேது?

கண்களை மூடிவிட்டோம்
காயங்களைப் போதையில்
மிதக்கவிட்டோம்
வலியே தெரியாது

துப்பாக்கி தூக்கிவிட்டோம்
இனி
முனகலும் கேட்காது

தூரத்தில் வானவில்லைக்
காட்டுகிறோம்
இனி இங்கு
வண்ணங்கள் ஒருபோதும் மாறாது
கோடிகோடியாய்ச்
சிற்றெரும்புகள் ஊர்ந்து செல்லும்
கறுப்புப் பாதையில்
நாற்றத்துடன் வளைந்தோடும்
கறுப்பு நதிகள்
வெள்ளை ஆடைகளுக்குள்
கறுப்பு மனங்கள்
வெள்ளை மனங்களுக்குக்
கறுப்பு விடைகள்

வெள்ளையடித்து விட்டோம்
எங்களின் மீது

ஒளிந்திருப்பது
நூற்றாண்டுகளின் இருள்

 
 
அவன் மாபெரும் கவிஞன்
என்று
நான்
எழுதாமலிருக்க முடியாது
குயில் கூவுதென்று
காகம் கரையாமல் நிறுத்துமா?
தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி


என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
அவர் கண்டுபிடித்த சூத்திரங்கள்
மிக எளிமையானவை
விரைவில் விடைகிடைக்கும்

கருவுற்றதும், கல்வி கற்றதும்,
காளையானதும் வேலைவந்ததும்
எல்லாம் அவர் செயல்

காதலிப்பதும், பிள்ளைபெறுவதும்,
காரில் போவதும் சோபாவில் அமர்வதும்
பெண்டாட்டியை அடக்குவதும்
அவருக்காக நான் செய்வது

உலகமே அவருடையதுதான்
அவரே மீண்டும் பிறந்தேனா?

 
 
ஒளிரும் வார்த்தைகள்


வார்த்தைகளின் நடனத்தில்
உயிர் எழுகிறது
அது உயரங்களிலும்
பள்ளங்களிலும்
உருண்டோடுகிறது

இந்த வார்த்தைகள் தானே
அகராதியில்
புதையுண்டிருந்தன
அடிமைகளின் வீடுகளில்
தூங்கிக் கொண்டிருந்தன
எஜமானர்களின் காலை
நக்கிக் கொண்டிருந்தன

அவனிடம் மட்டும்
தீயாக எப்படி எழுந்தன?
தோண்டி


அரசின் வார்த்தைகளில்
முப்பது வருடங்கள்
நசுங்கிய
என் வார்த்தைகள்
முனகவும் உபயோகப்படுவதில்லை

எஜமானனுக்காக, அவன் வாசலில்
காத்திருந்து பழகிய அவை
நிமிர முடியாதபடி
உடைந்து விட்டன

புதைந்து போன பொக்கிஷத்தை
நூற்றாண்டுகள் பின் தேடும்
ஆய்வாளன் போல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னையும்
விடை கொடுத்தனுப்பிய வார்த்தைகளையும்
ஆய்வின் நீளம்


பட்டாம் பூச்சிகளுக்கு
உத்தரவிட்டாகிவிட்டது
பூக்களைத் தீண்டாதீர்
சோதனைச் சாலைகளில் மட்டுமே
அனுமதி உண்டு
விஞ்ஞானிகளின் மேற்பார்வையில்

சிறகுகளை வெட்டியாகி விட்டது
மலர்கள் கண்ணாடிக் கூடுகளில்
மகரந்தங்கள் சேகரிக்கப்படும்
சோதனைச் சாவடிகளின்
கண்ணாடிச் செவ்வகங்களில்
பூச்சிகள் அமர நாற்காலிகள்

அழகாக இல்லாத மொட்டுகள்
கருக்கப்படும்
அழகான பூக்களுக்குப்
பாதுகாப்புக் கொடுக்கப்படும்

தோட்டங்கள் அமைக்கவும்,
பூக்கும் காய்க்கும் காலம்
அனைத்தும்
சுகாதார விதிகளின் படி

புதிய பூக்களுக்கு
வளரும் வரை இரும்பிலும்
வளர்ந்த பிறகு தங்கத்திலும்
விலங்குகள் மாட்டப்படும்

நாம் கடவுளாக முடியாதென்று சொல்லி
மனிதர்களாகலாம்
இப்படி
செயற்கையாக எல்ல்ல்லாம் செய்துகொண்டே

 
 
 

Thursday, 10 December 2009

சட்டை உரித்தல்


ஒருமுறை பிறந்தேன்
பிறந்தபின்
பாம்புச் சட்டை உரிவதுபோல்,
அதன் உரிந்த சட்டையைப் போலவே
நான்
உயிரற்றுப் போய்விடாமலிருக்க
ஒவ்வொரு முறையும்
உரிக்கிறேன் என்னை
கொஞ்ச காலத்தின் பிறகு
மூச்சடைக்க வைக்கும்
தினசரிச் சாதாரணங்கள்
மாலைகளுடன் காத்திருக்கும்
நமக்காக

ஆனாலும்
இருளோ ஒளியோ
தெரியாத ஏதோ ஒன்று
தேவைப்படுகிறது
மீண்டும் உரித்துக் கொண்டு
தொடர்ந்து செல்ல

Tuesday, 8 December 2009

எல்லை


வெளியே சுவற்றில்
ஒட்டப்பட்டிருந்த பெண்
விரல்நீட்டி எச்சரித்தாள்
மனைவியிடம் சொன்னேன்
“போஸ்டரில் தானே ஏன் பயம்? என்றாள்
“அதனால்தான்” என்று தகித்தேன்
நகையெனப் படுவது யாதெனின்


இறுக்கப்பட்ட பழக்கங்களின் பெட்டியில்
பிணமாகக் கிடக்கிறது மகிழ்ச்சி
பதுக்கப்பட்ட தங்கம் போல
பார்த்துப் பாதுகாத்து
ரகஸியமாக அனுபவிக்கிறது
சுயநலம்

ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பார்த்துப்
புன்னகைக்க மறுக்கும் மனிதர்கள்
வீட்டுக்குள்
புரண்டு புரண்டு சிரிக்கிறார்கள்
பைத்தியக்காரர்களைப் போல

செதுக்கப்பட்ட சூத்திரங்கள்
அரங்கேறும் காலம்
சிரிப்புக்கான தருணங்களை
திரும்பியும் பார்ப்பதில்லை
அமுத சுரபியை யாரும்
சீண்டுவதில்லை

Wednesday, 2 December 2009

முட நகரம்




மாளிகைகளின் வரிசைகள்
வான்தொட பின்புறத்தில்
நிலத்தில் நிற்க வலுவின்றித்
தடுமாறும் குடிசைகள்

மாநகரின் சாலைகளின்
தெரிவதில்லை

கார்க் கண்ணாடிகளின்,
விலையுயர்ந்த
அழகு
மூக்குக் கண்ணாடிகளின்
கறுப்புத் திரைகளின் வழியே

பார்க்க விரும்புவதும் இல்லை
அதனால் இல்லாததாகிவிட்டது

தன்னை முடமாக்கிக் கொண்டு
தங்கக் கீரீடம் சூட்டி
மினுக்குகிறது மாநகரம்.
உட்கடல்


இந்த அலைகள்
கரை எதையும் தொடுவதில்லை
தன்னுள்ளே சுழன்று சுழன்று

எந்த நதியின் நன்னீரும்
இந்த அலைகளைத் தழுவியதில்லை
தன் உப்பே போதுமென


மழை விழுந்தால் குடித்துவிடும்.
இல்லையெனில், காத்திருக்கும்
அந்நீரும் தன்னீரென்றறிந்து

Thursday, 26 November 2009

பழைய முகம்


இந்தத் தெப்பக்குளத்தில்
நீரில் இறங்கி
கைவிரவி அலைஅலையாய்ப்
போகவிட்டு
ஏரிக்குக் கொடுத்த
என் முகம்
இங்கேதான் ஒளிந்திருக்கிறது

காய்ந்துவிட்ட வெடிப்புகளில்
யாரோ என்றோ பதித்த
காலடிச் சுவட்டில்
எதிரொளிக்கும் என்று
காத்திருக்கிறேன்
எடுத்துக் கொள்ள

Monday, 23 November 2009

தகுதி

தனிமையில் கதறும் என் குரல்
யார் காதுகளிலும்
விழுவதில்லை
என்னைப் பார்த்தால் உங்களுக்குத்
தூக்கம் வராமல் போகலாம்

இசைமிகுந்த இரவில்
என் குரல் அவலமானது
நெஞ்சின் ஈரத்தைக் கிளறக்கூடும்

நீங்கள் ஒருபோதும் கண்டிராத
புதிய மிருகம் நான்
இல்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகு
என்ன பெயரிடுவீர்கள் எனக்கு?

நகரங்களின் அடுக்குமாடி
இடுக்குகளில்
விலைகுறைந்த கள்ள மதுக்கடைகளில்
நெடுஞ்சாலையில்,
பத்திரிக்கைகளில், புத்தகங்களில்
மின்னற் பொழுதில் மறையும்
உருவம் என்னுடையது

உங்கள் மேலான நினைவுகளுக்குத்
தகுதியானதல்ல அது
மிதிபடும் ஏதோ ஒன்று


சின்னஞ்சிறு காலடிகள்
வைத்தேன்
உறுதியுடன்
புதுப் பாதையை நோக்கி


 சிக்கிச் சிதைந்தது காலடியில்
நான் வளர்த்த சிட்டுக் குருவி

பார்த்திருக்கலாம்
அது நின்றதை


கனவின் பாரத்தில்
கண்களும் இருட்டி விட்டன
வானத்தைப் பிடித்துத்
தொங்க முனைகையில்
கால்களைப் பார்ப்பதில்லை யாரும்

அதனடியில்
கசங்கும்
ஏதேனும் இருக்கக்கூடும்


கீழே மிதித்துத்தான்
எவ்வ வேண்டியிருக்கிறது
எதற்காகவும்…

Friday, 20 November 2009

வரைந்தவை


தொலைபேசியில்
மணிக்குப் பின் வந்தது
இருபது வருடங்களுக்கு முன்
தொலைந்து போன
குரல்

வாழ்க்கைக் கடலின் மேல்
பாலங்கட்டி,
துயரங்களைத் தாண்டிவரும்
புன்னகை

மீண்டும் மீண்டும்
வரைந்து பார்த்த
மன ஓவியங்களில்
அகப்படுவதில்லை
நிஜம்

Thursday, 19 November 2009

கனவு வானம்


என்னைச்
செதுக்கிக் கொண்டிருக்கும் போது
செதுக்கியது அலங்கோலமாகி
சிதறல்கள் சிற்பங்களாகி
கை விட்டுப் போனதை
அழகாய் இருப்பதாக
கற்பனை செய்து கொள்கிறது
மனம்

வரைந்து கொண்டிருக்கும்போதே
மறைந்துவிடும்
நீர்ச்சிற்பங்கள்
நிறைவளித்ததாய்
நீயும் நினைத்துக் கொள்

கனவுகள் வானில் தெரிந்தால்தானே
கால்கள் தரையில் நடக்கும்

Tuesday, 10 November 2009

பள்ளி எழுச்சி


சம்பளமாய் வரும்
டாலரில் மூழ்கி
தற்கொலை செய்துகொண்டது
அக்கினிக் குஞ்சு

கிம்பளமாய் வரும்
மில்லியன் டாலரில்
மூச்சு விடுகிறது அரசியல்

கும்பலாய் அலையும்
பரதேசிக் கூட்டம்
கூசி மறைந்து கொள்கிறது
இயலாமையில்

அம்பும் வில்லும்
தெருவோரத்தில் கிடக்கின்றன
துருப்பிடித்து

எம்பெருமானும் தம்மிடம்நீங்கி
நம்மிடம் வருவாரில்லை

யார்தான் பாடுவது
அந்தப் பாடலை?

Tuesday, 27 October 2009

ஐயம்

செல்வங்கொழிக்கும்
நகரின்
வாகனங்களின்
இரைச்சல் மிகுந்த
இரவில்,
சோடியம் மஞ்சள் விளக்கொளியில்
அழுக்கு ஆடை
மூட
தன்னை மறந்து
திரும்பிப்படுத்தால்
விழுந்துவிடும்
எந்தக்கவலையுமின்றி
மேம்பாலத்தின்
ஓரடிச் சுவர்
விளிம்பில்,
தூங்கிக்கொண்டிருப்பவன்

எழுவானா ?

விழுவானா ?

Monday, 26 October 2009

கரைதல்



பெண்ணே
கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன

ஆணென்பதால் என்னை வெறுக்காதே
உன்னைப்போல் ஒரு பெண்தான்
என்னை வளர்த்தாள்

உன்னை கடுங்காவலில் வைத்தார்கள் என்னாதே
என்னை உனக்காகத்தான் ஒடித்தார்கள்
நாமும் ஒப்பினோம்
துணை தேவையென்று

என்
மூளையில் அழுகிய குப்பைகள்
என்று வெறுக்காதே
வானத்திலிருந்து எதையும் நான்
எடுத்து வரவில்லை

நாம் அழகானவர்கள் தாம்
மனதிலும் உடலிலும்

உன்
இதயத்திலும் கபடங்கள் உண்டு
என்னில் அதன்
எதிரொளி கண்டு
அஞ்சாதே
என்னிலும் பூமணம் உண்டு

நான் கடவுளாகவும்
நீ தேவதையாகவுமே
விரும்பினோம்
போட்டி போட்டுக் கொண்டு
சாத்தானாகவும்
பேயாகவும் ஆனோம்

இந்தச் சமூகம் மிகக் கொடுமையானது
நம் மீது மலைமலையாய்ப்
பாரங்களை ஏற்றிவைத்துவிட்டு
விளையாடு என்கிறது

ஒருவர் துயரங்ககளை
இன்னொருவர் பார்த்துச்
சிரிக்கலாம்
இதுதான் நமது சுதந்திரம்

எந்தச் சுவாமிகளாலும்
சட்டங்களாலும்
முடியாது
நீயும் நானும் மட்டுமே.

முடிந்தால்
சமாதானம் செய்துகொள்வோம்
பிரிவோம் அல்லது
சந்திப்போம்
ஆனால்
மகிழ்ச்சியாக இருக்க
முயலுவோம்

கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன.

Friday, 23 October 2009

அதிசயமான பெண்

மிக அழகான பெண்கள் என் ரகஸியம் என்ன
என்று வியக்கின்றனர்.

நான் அழகி அல்ல
என்னுடல், பேஷன் மாடல்களின் அளவுகளில் இல்லை

.நான் இப்படிச் சொன்னால் அவர்கள்
பொய்சொல்கிறேன் என்கிறார்கள்

என் கைகள் எட்டும் தூரம்
இடுப்பின் விரிவு
நடையின் அளவு
உதடுகளின் வளைவு

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அதுதான் நான்.

நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ
அவ்வளவு மென்மையாக
ஒரு அறைக்குள் நுழைந்து
ஒரு ஆணிடம் செல்கிறேன்
அவர்கள் எழுந்து நிற்கிறார்கள்
அல்லது
மண்டியிடுகிறார்கள்
ஈக்களாக என்னைச் சூழ்கிறார்கள்
தேனிக் கூட்டைப் போல்

நான் சொல்லுகிறேன்
என் கண்ணிலுள்ள கனல்
பற்களின் ஒளி
இடையின் மெல்லசைவுகள்
இவைதான்

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அதுதான் நான்.

என்னைக்கண்டு
ஆண்கள் வியந்துபோனார்கள்
எவ்வளவோ முயன்றார்கள்
என் சூட்சுமத்தைத்
தொடமுடியவில்லை
அவர்களால்

நான் அவர்களுக்குக் காட்ட முயன்றேன்
அப்போதும் கண்ணுக்குத் தெரியவில்லை
என்கிறார்கள் அவர்கள்

நான் சொல்கிறேன்
என் பின்புறத்தின் வளைவு
என் சிரிப்பின் பேரொளி
முலைகளின் குதியோட்டம்
என் இயல்பின் இதம்

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அது நான்தான்

இப்போது உங்களுக்குப் புரியும்
ஏன் என் தலை வணங்காதென்று
நான் கத்துவதோ குதிப்பதோ இல்லை
அல்லது மிக உரத்துப் பேசுவதும் இல்லை
நான் செல்வதை நீங்கள் பார்க்கும் போது
உங்களை நான் பெருமிதப் படுத்தவேண்டும்

நான் சொல்கிறேன்
என் பாதங்களின் ஒலி
கூந்தலின் நெளிவுகள்
என் உள்ளங்கை
என்னைக் கவனித்துக் கொள்ளும் தேவை

ஏனெனில்
நான் அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அது நான்தான்

****
மாயா ஏஞ்சலோ
மொழிபெயர்ப்பு வே.ராஜகோபால்

Wednesday, 21 October 2009

எத்தனைமுறை எதிர்த்தடித்தாலும்,


அதே வேகத்தில்

சுவரிலிருந்து வரும் பந்தென,

எனக்காக

வாசலில்

காத்திருக்கும்

தோல்விகள்



எதிர்பார்த்துக் கனவுகள் கண்டு

ஏமாந்திருப்பதில்

வீரன் நான்



வரலாற்றில் உருவமற்ற

தோல்வியுற்றவர்களைப் போலவே

வென்றவர்களும்

வார்த்தைகளாக நின்று விடுகிறார்கள்



யாருக்காகப் எழுதுகிறீர்கள்

கவிதைகளை

உங்கள் சுய சரிதைகளை?

யாருக்காக வைக்கிறீர்கள்

சிலைகளை?

அவை

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

நோயாளியின்

மயக்க உளறல்கள்



பிரபஞ்சத்தில் புள்ளியிலும் சிறிதாக

மறையும் பூமி

அதில் புள்ளியிலும் சிறிதாக





உங்களுடைய அளவுகோல்களையே

உபயோகித்தாலும்

தோல்வியில்தான் முடியும் வாழ்வு

என்றென்றும்



நாம் நினைத்தபடி

வெல்ல முடியாததுதான்

பூமியில் எதுவும்

Monday, 12 October 2009

எளிதல்ல



ஐயா கனவானே

ஏழைகள் சாவதும் எளிதல்ல



செத்த அன்று செலவுகள் ஏராளம்

முதலில் வரும்

ஆஸ்பத்திரி,

டாக்டர்

லஞ்சம்

விருந்தினர் நிற்க இடம், நிழல்

உணவு,

ஐயர், சடங்குகள்,

வண்டி தள்ளுபவன்

குழி தோண்டுபவன்,

தீயெரிப்பவன்

என்று முடிவின்றித் தொடரும்…



ஆக்ஸிடெண்டில்,

கலவரத்தில்

வெள்ளத்தில்,பூகம்பத்தில்

சாவது நல்லதுதான்

கவர்மெண்ட் பணங்கிடைக்கும்

அதுதான் பிரார்த்தனை



ஏழைகள் சாவது எளிதல்ல….

Saturday, 3 October 2009

மலைகளிடையே பறக்கும் சிறுகுருவி

பறந்து பறந்தே பழகிவிட்டது



பசித்தால் இரைதெரியும் அதற்கு

கீழிரங்கும் எருமையின் முதுகில்

மீண்டும் மலைகளும்

நதிகளும் வானும்



பெருமலைகளை நோக்கியும்

முகில்களிடை விரைந்து பாய்ந்தும்

நதிகளில் தன் பிம்பம் கண்டும்

அருவித் துளிகளில் தன்னை மறந்தும்,

வெய்யில் எரிப்பில் கிறங்கி விழுந்தும்



தரைக்கு வராமலே இருக்க முனையும்

சும்மா கிட என்று சொல்லும் சொந்தமும்

வா வா என்று அழைக்கும் வானும்
காந்தி பிறந்த நாளில்




தினமும் கீரை விற்க வரும்

கிழவனின் குரலில்

இழையும் தனிமை

எப்போதாவதுதான்

என்னிடம் எழுகிறது



பாறையாய் புத்தகங்களைச்

சுமக்கும் குழந்தைகள்

என்றைக்காவது தான்

நான் பார்க்க நேருகிறது



தினமும் என்னால்

வதை பட்டுக் கொண்டிருக்கும்

மனைவியின் குரல்

எப்போதாவதுதான்

எனக்கு ஒலிக்கிறது


வேண்டுமென்றே நான்

பார்வையை விலக்கிக் கொள்ளும்

குஷ்டரோகியின்

வலி

எப்போதாவது தான் எனக்கு

அனுபவமாகிறது



எதுவேனும் செய்ய எத்தனித்து

வருடத்தில் ஒவ்வொருநாள்

இவர்களுக்கு செலுத்திவிடுகிறேன்

அஞ்சலி

 * * * * * * * * * * * * * * * * * * * * * *


எனது நடிப்பு




பாவியென்று மட்டும் என்னை அழைக்காதே

நல்ல மனிதனாக இருந்தது தவிர

நான் எதுவும் செய்யவில்லை



தோற்றுவிட்டேன் என்று மட்டும் நினைக்காதே

விளையாட்டை அனுபவிப்பதிலேயே

மகிழ்ந்திருந்தேன்

வெற்றியின் வெறியில் அல்ல



அதிகாரியாக மிடுக்கவில்லை என்று

நகையாடாதே

எளியவர்களின் துயரத்தை நான்

பார்த்திருந்தேன்



சாமர்த்தியம் இல்லையென்று

பழிக்காதே

தேவையில்லை என்றுதான்

நினைக்கிறேன்



எழுதத் தெரியவில்லை என்று

ஒதுக்காதே

அறிவினால் மட்டும் அன்பைப்

பகிர முடியாதென்று அறிந்திருக்கிறேன்

* * * * * ************   ******* * * * * *
 
 
 
 
கடவுளைத் தோற்கடித்தவன்





மழை நாளின் இரவில்

காணாமல் போன நண்பன்

கடற்கரையொரம்

படுத்திருப்பான்

அங்கே விளையாடும்

குழந்தைகளை

வேடிக்கை பார்ப்பான்

மனைவியுடன் அமர்ந்திருக்கும்

கணவன் சிரிக்கிறானா என்று

கவனித்திருப்பான்



உன்னுடன் வாழமாட்டேன்

என்று போன மனைவி

பிறக்காமல் போன குழந்தை

அழகிய பெண்ணாயிருந்தும்

வாழாவெட்டி என்று ஊரார் சொல்லத்

திரும்பி வந்து சிதைந்து கொண்டிருக்கும்

அழகு அக்கா

முன்னரே மணம் முடித்தாலும்

நாற்பத்தைந்து வயதில்

மனைவியுடன் சேரும் பாக்கியமுள்ள

அண்ணன்

அப்பா இருக்கும்போது மணம்முடித்தும்,

பிரிந்து வந்து, ஐம்பது வயதில்

கணவனுடன் வாழப் போன

மூத்த அக்கா



காட்டாற்று வெள்ளம் போல்

பாயும் நிகழ்வுகளின்

சூத்திரதாரி கடவுளென்றே

நினைத்திருந்தான்

பக்திப் பரவசத்தில்

பிறவிக்கடலைக் கடக்க

எத்தனித்தான்

சமூக நியதிகள்

அனைத்தும் காத்தான்

எதிலும் கிட்டவில்லை

மனஅமைதி



காணாமற் போன நண்பன்

கடற்கரையோரம்

தேடிக்கொண்டிருக்கக் கூடும்

 ஏதாவதொன்று

- - - - - - - - - ------ -------------------- ------------------
 
 
 
கலங்கரை சேருமா? கலங்குதல் நேருமா?


புலன்களை அடக்கியே புலம்புதல் ஆகுமா?

தவறுகள் தொடருமா? தவிப்புகள் அடங்குமா?

கவலைகள் தீருமா? கனவுகள் பொசுங்குமா?



இலக்கியம் ஊறுமா? இலக்கின்றி ஓடுமா?

உலகெனும் சேற்றிலே உழல்வதே நியாயமா?

கலைகளின் அருள்ஒளி கண்களில் வீசுமா?

பலபொருள் தேடலில் காலமே கரையுமா?



கடவுளைத் துதிப்பவன் கோவிலைச் சுற்றலாம்

மடங்களை மதிப்பவன் குருவிடம் கற்கலாம்

குடங்களைக் குடிப்பவன் குடித்தே அழியலாம்

இடவலம் என்றுநான் எங்குதான் செல்வதோ?



இன்றைய பசிக்கென இறைஞ்சினால் போதுமோ?

எதிர்வரும் நாளையின்(று) இருட்டிலே தூங்குமோ?

பதில்வரும் நாள்வரை பயணத்தை நிறுத்தவோ?

எதுவரும் என்றுநாள்? எண்ணியே ஏங்கவோ?

Wednesday, 30 September 2009

பச்சைக் குழம்புபோல் இருக்கும்

கோவில் தெப்பக்குளம் புனிதமானது
கங்கையிலிருந்து எழுந்தது
மனதையும் உடலையும்
சுத்தீகரிப்பது

யாரும் அதில்
இறங்குவதில்லை இப்போது

Thursday, 17 September 2009

இருள்மூடி இருள்மூடி கிடந்த நாட்டில்


எந்தஒரு விடிவுமினி வாரா தென்றே


அருள்கூறும் ஆண்டவரின் வார்த்தை எல்லாம்


அமெரிக்க டாலரினால் மாறு தண்ணே


சேரியிலிருந் தொருவன் சி காகோ சென்றான்


சீனப்பெண் காதலிலே ஒருவன் வீழ்ந்தான்


மாறிவரும் கம்ப்யூட்டர் யுகத்தில் பூமி


மாறுகிற வேகத்தை யாரே சொல்வார்?


கணிணிகளில் அலைஅலையாய் தேனிக் கூட்டம்


கவர்ச்சிகர வடிவங்கள் கருத்தின் ஏற்றம்


பணிபுரியும் இடங்களிலே காதல் பாட்டும்


பதிவெழுதும் கணங்களிலே பாயும் ஊற்றும்


அணியணியாய் கிளம்புகிற புதிய காற்றும்


அதனூடே இலக்கியத்தின் பழைய நாற்றம்


பிணிபோலச் சினிமாவின் பின்னால் தேட்டம்


பிறகென்ன கொடைபோல காட்சிக் கூடம்


தமிழ்ப்பெண்கள் தைரியமாய் பேசக் கண்டேன்


தலைமைக்குப் பக்கமவர் வருதல் கண்டேன்


குமிழ்சிரிப்பும் கும்மாளம் போடல் கண்டேன்


குவலையந்தான் மாறுவதை இங்கே கண்டேன்


உமிபோல பழம்கெடுதல் ஊதல் கண்டேன்


உற்சாகம் கொண்டேநான் பாடு கின்றேன்


இமையாமல் வியக்கின்றேன் பஞ்சாங் கங்கள்


இனிமாறா விட்டாலும் எல்லாம் மாறும்
இசை வேண்டும் எனக்கு


ஆழ்ந்த தெளிவான திரவத்தைப் போல்


இயைந்து, குழைந்து, மெல்ல வடியும்

இசை எனக்குத் தேவை



நோய்நீக்கி, ஊஞ்சலாய் அசைந்து,

பழைய, களைத்து இறந்தவனை அமைதி கொள்ளவைத்த,

ஒரு பாடலின் இசை



என் தலையில், நடுங்கும் விரல்களில்

தண்ணீர்போல் விழுந்து,

கனவுகளை ஒளிரவிடும்

ஒரு பாடல்



அந்த இசையின் குழைவில் மாயமிருக்கும்

ஓய்வின் கணங்கள்,

மெல்லவிடும் மூச்சுக் காற்று,

அமைதியான நெஞ்சம்

அது

கடலின் ஆழத்தின் அமைதியில்

மெல்ல மூழ்கி, நிறம் மங்கி,

பச்சை வண்ண நீரில்,

லயத்தின் கைகளில் ஆடியும் தூங்கியும்

மிதக்கும்

மொழிபெயர்ப்பு-
ஆங்கில மூலம்:  எலிசபெத் பிஷப்

Tuesday, 15 September 2009


இருந்த வீடு
காலி செய்ததும்
அன்னியமாகி விட்டது
தேடித் தேடி
அருகில் சென்றாலும்
புன்னகைப்பதில்லை
இருந்த நகரத்து
வீதிகளும் கண்டுகொள்வதில்லை

நினைவுக் கானலில்
அலையும் மானென
மனம்

முதற்குரலின்றி
எதிரொலிக்கும் பாடல்கள்

புன்னகைக்கும் முகங்கள்
தொலைபேசிக் குரல்கள்
தோண்டியெடுத்துவிடும்
தங்கச் சுரங்கங்களை

ஆனாலும்
இன்று வருவதில்லை
நேற்று
எனது மொழி

நான் ஊமையாகத்தான் இருந்தேன்
முன்னொருநாளில்

விளையாட்டுத் தோழர்கள்
கேட்கும் கேள்விகளுக்கும்,
பெயர் என்ன என்று கேட்டால்
அடுத்த கேள்வி என்னவென்று தெரிந்தும்
மேனி நிறத்துக்காக,
முகத்தின் வடிவுக்காக
எழும் சந்தேகங்களுக்கும்
பதில் சொல்ல
வெட்கப்பட்டேன்

தங்கள் திருமணத்தின் மீதே
நம்பிக்கையற்றிருந்தும்
போராடிய
தாய் தந்தையருக்காக
கூச்சப்பட்டேன்
முன்னொரு நாளில்
ஊமையாகத்தானிருந்தேன்

வேண்டிய
ஆடைகள், கவனங்கள்
அன்புகள் இன்றி
தேடிக்
கண்டடைந்தேன்
கலைகளை.

கலைஞர்களின் தோட்டங்களில்
வரும் பறவைகளும்,
எழும் வாசனைகளும்,
விசாலமான புல்தரைகளும்,
காற்று நீரில் வரையும்
கனவுக்கோலங்களூம்
என்னுடன் பேசின

பிறகு உன்னதங்களையே
பேச விரும்பினேன்
என் மொழி யாருக்கும் புரியவில்லை

உலகம்
பொருட்களைப்
பிடுங்க நினைக்கும்
பிச்சைக்காரர்களுடயதாக
இருக்கிறது

நான் ஊமையாயிருந்தேன்
நானும் பேசுவேன்
என் மொழிதெரிந்த எவருடனும்

Monday, 7 September 2009

நானும் கனவானேன்

கடற்கரை மணலில் பலர்
கட்டிவைத்த சிற்பங்களை
உடைத்துக் கொண்டிருந்தேன்
மணல் மணல் என்று

கலைடாஸ்கொப்பை
உருட்டி உருட்டிக் காணும்
கனவுகளைச் சிதைத்தேன்
கண்ணாடித் துகள்கள் என்று

கலைந்தெழுந்தன
புதிய கனவுகள்
நானும் மணலில் புழுதியாய்
சிற்பத்தில் இறுகினேன்
உடைந்த கண்ணாடித் துகளாய்
புரண்டெழுகிறேன்

தாத்தா இறந்த நாளில்

தாத்தா இறந்த நாளில்
நான் அவரைப் பார்க்கவில்லை

என்றுமே அவர் என்னைப்
பார்க்க விரும்பியதில்லை
அவரைப் பார்க்கப் போனபோது
எங்களை விரட்டியது நினைவுண்டு

அம்மா
என்னையும் தங்கையையும்
கீழ்ச்சாதி அப்பாவையும்
விட்டுவிட்டுப்
பணிய வேண்டும்
அவருடைய
நெடுநாளைய அவா
தன் சம்பளத்தையும்
அவரிடமே தந்திருக்க வேண்டும்

அம்மாவுக்கும் ஆசைதான்
உயர்ஜாதியில் பிறந்தவள்
உயர்ஜாதியில் சாக விரும்பினாள்
சொர்க்கத்திலும் உண்டு ஜாதி



தாத்தா இறந்த நாளில்
நான் அவரைப் பார்க்கவில்லை
கருமாதிச் செலவுக்குப் பணம்
அனுப்பி வைத்தேன்
இல்லையெனில்
அவர் சொர்க்கத்துக்குப் போகாமலிருந்து
அந்தப் பாவம்
எங்களை வந்து பிடிக்கும்
அவரே பேயாகி
தொந்தரவு செய்யக்கூடும்

சொர்க்கத்தில்
எனக்காக
துண்டுவிரித்து இடம்பிடித்து
அவர் காத்திருக்கக் கூடும்
நான் அங்கே போகவிரும்பவில்லை

தாத்தா இறந்த நாளில்
அவரிடம் பேசவில்லை
அதற்கு முன்னாலும்தான்

Sunday, 6 September 2009

Vaman II

Thunderous steps that cause earth vibrate,
Murderous anger in his eyes,There comes the Vaman, the dwarf
He is the genie inside the lamp of alladin
Scratch his head and he comes mightiest colossus
Remember “Sambhavami Yuge yuge”,
He will bring down the kingdom of evil
He will take on the slaves of defvil
Ofcourse, that will be Krishnavatar

These are the stories we have been hearing for ltoo long
Gods have come ad gone
God has decided that nine avatars are enough
Tenth is not worth of the human that dwell on earth

Thus decided the Vaman
If order cannot be changed
Bring disorder and then dawns the order
This is the time for fights, battles and wars
Mahabharat

Krubachari and Dronochari
We do not know where they are
Krishna and Bheema hide behind
Egging on the soldiers to fight
Everyone is searching for Aswathama
And Abhimanyu
Lots of noises,
Cacophony, roars but hardly any fight,
Pandavas and Kauravas
Have reached an understanding

‘Thousands of Mahabharats may be staged
But real fights, we won’t have
Why should we die for people who don’t care
We will play the game and charge them the fare’
So goes the MOU

Vaman has to come
He is dwarf, he does not have the power of the king
Solders or clerks
Elephants or Horses
But he has a voice like an ocean,
That dominates all the sounds
Of the TV channels, politicians Rhetorics’
And what not
He comes like waves
He engulfs everything
Rewrites the Histories on the shores
He has two faces one for royalty
And the other for loyalty

He will dupe the Pandavas and Kauravas
Break the MOU and save me and you
Morality is like water
It changes
As per the Sand and Salt
He will follow this law

He will be born among us
The perfect model of immorality
With lizard like mouth and
A trait like blizzard

No, we do not need a Mahatma
We need a monster,
Either in the name of god the pious and pure
Or in the name of the devil on the buffalos.

Saturday, 5 September 2009


நான் குழந்தையாக
இருந்த பொழுது கடவுள்
நல்லவராகத்தான் இருந்தார்.
கேட்டதைக் கொடுத்ததில்லை
என்றாலும்
என்னுடன் கண்ணாமூச்சி ஆடினார்.
தாலாட்டுப் பாடினார்
இன்னொரு கடவுளிடம்
எனக்காகத் தவமிருந்தார்
என்னுடனே இருந்தார்
எப்போதும்

நான் பெரியவனாகியதும்
கோவிலும், பூசாரியும்,
மாலையும் மஞ்சளும்,
தங்கமும் பட்டும்,
ஆளும் மேளமும்
வேண்டுமாம் அவருக்கு
என்னிடமில்லை இவை எதுவும்
அவர் அங்கே
நான் இங்கே

எப்போதும்
புலம்பிக் கொண்டிருக்கும்
நகரத்து வாய்
என் கிராமத்திலே…….என்று

அங்கொன்றும் எனக்கில்லை
நின்று விடும் காலம்
இளமையுடன், என் வறுமையுடன்

பெருநகரத்தின் எறும்புகளுக்கு
ஒரு பருக்கைச் சோறு
கிடைத்துவிடுகிறது
ரொம்ப நெருங்கிலாலொழியக்
கேட்பதில்லை யாரும் ஜாதியை..

ஒரு புதிய குழந்தைப் பருவம் தேடி
தலைதெறிக்கும்
ஓட்டத்தில்,
அழுத்தவில்லை
முதுகிலிருக்கும் பாரம்.

Thursday, 27 August 2009



அப்பாவின் கனவுகள்
என்னைப்பற்றி ஏராளம்
அம்மாவின் கனவுகள்
என்னைப் பற்றி ஏராளம்
எனக்கும்தான்
என்னைப் பற்றி
சுமந்து சுமந்து
நொறுங்கிவிட்டது

இந்த நேரம் வந்தன
மனைவியின்
குழந்தைகளின் கனவுகள்

நிறைவேறாத கனவுகளின்
ஊர்வலம்
இப்போதெல்லாம்
கனவுகள் சாட்டையடிகளாக
விழுகின்றன என் மீது
இருளே இல்லாத…..

இருளைக் கண்டால்
எனக்கு பயம்
அதற்குள் என்ன
இருக்குமோ?

மறக்க முடியாத
கொடூரம்
சகிக்கமுடியாத வன்முறை
நினைக்க விரும்பாத
இழப்பு
மன்னிக்க முடியாத தவறு
இன்னும் எதுவேனும்..

ஒவ்வொரு நாளிலும்,
வாழ்விலும்,
வந்துவிடுகிறது இரவு
ஒவ்வொரு பகலிலும்
நிம்மதியின்றித் தவிக்கிறேன்
இரவை எண்ணி

ஒருபோதும் வெல்ல முடிந்ததில்லை
இருளை
ஒரு முன்னறிவிப்புமின்றி
என் அனைத்தையும் இறுக்கிச்
சூழ்ந்து விடுகிறது

எப்படியோ
விடிந்தும் விடுகிறது பிறகு

Friday, 21 August 2009

வீதியைக் கண்டிலாதார்

வீட்டுள் ஏ.சி.,
உடற்பயிற்சிக்கு
நடக்கும் யந்திரம்
வீட்டுள் நடக்க கார்பெட்
கால்துடைக்க மிதியடி வாசலில்
வெளியில் நடக்குமுன்
உறையோடு காலணி
வீதியில் செல்ல கார்
காரைத்திறக்க காவலன்
கண்ணிலும், காரிலும்
கறுப்புக் கண்ணாடி,
அலுவலகத்திலும் அவ்வாறே ,
எல்லாம் உள்ளேயே கிடைக்கும்
வியர்வை அறிந்ததில்லை
இருட்டைப் பார்த்ததில்லை
பசியறிந்ததில்லை
எதற்கும் ஏங்கியதில்லை
தொல்காப்பியம் முதல்
தலைவருக்கான தகுதிகள்
இவையே

Wednesday, 19 August 2009

தோற்கும் கலை


புனித இதயங்களின் நாட்டில்
யாருக்கும் பாவமன்னிப்பில்லை
பண நோட்டுகள் அரசனாகும்போது
பண்பு அதில் குறுக்கிடுவதில்லை
மானம் இறந்து விடுகிறது

வெற்று வார்த்தைகளின் காட்டில்
நுழைந்து செல்கிறோம்
அதிகபட்ச வன்முறையாளன் வாழ்கிறான்
சாக்குகள் (போலிக் காரணங்கள்)
தூசிபடிந்த புராதன காலத்தின்
கண்டுபிடிப்புகள்

நம் எல்லோருக்கும்

அவர்கள் லஞ்சம் கொடுத்துவிட்டார்கள்
யாரும் குரல் கொடுப்பதில்லை
நாம் துப்பாக்கிகளுடன் அலைகிறோம்
மேஜையின் கீழ்வரும் பணத்தை
நாம் நேசிக்கிறோம்

யாரும் புரியாதவனில்லை
அவர்கள் எல்லா உருவங்களிலும்
நிறங்களிலும் வருகிறார்கள்
மிக மோசமானவர்கள்
வெள்ளை உடை/காலரில் வருகிறார்கள்

எங்கே அரசியல் என்பது திருட்டாக
கோடீஸ்வரர்களின் பணமாக
தங்கப் பப்பாளியாக இருக்கிறதோ
அங்கே
சமூக விலங்குகள் சிங்கமாக,
சொத்துகளே இரையாக
இருக்கின்றன
நாமெல்லாம் வேட்டை விலங்குகள்
யாரும் ஒலி எழுப்புவதில்லை
நாம் துப்பாக்கிகளுடன் அலைகிறோம்
மேஜையின் கீழ்வரும் பணத்தை
நாம் நேசிக்கிறோம்

நம் எல்லோருக்கும்

அவர்கள் லஞ்சம் கொடுத்துவிட்டார்கள்

--கொலம்பியத் திரைப்படத்தில்(The art of losing) வரும் பாடல்

Monday, 17 August 2009

எல்லோரும்
தேடுவது போல்
நடித்துக் கொண்டிருக்கிறோம்
நெஞ்சில் பூட்டிவைத்து
இருட்டறையில் சாவியை
வைத்துக்கொண்டு..
அதற்காகவே
உயிர்விடப்போவதாய்
சூளுரைத்தோம்
தற்கொலைக்காக கயிற்றில்
தன்னை இறுக்கிக்
கொண்டிருக்கிறது
உண்மை
ஒரு நாள்

ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
அந்த வீட்டுத் தோட்டத்தின்
மல்லிகைப் பூக்களைத்
தொடுத்திருப்பேன்
எத்தனையோ எழுத மறந்த கவிதைகளை
காற்றில் எழுதுவேன் அப்போது

பஸ்ஸில் இடிபட்டு விழுந்து
வாயில் தார் பூசியதை
மறந்து குளிப்பேன்
நீரோடையில்
மெல்லவரும் தென்றலில்
மயிர் சிலிர்ப்பேன்

என் மருத்துவர் இன்னொரு முறை
அழைக்காத பொழுது
என் பேத்திக்கு அல்லது
அவள் மகளுக்கு
துணைஒன்று
கிடைத்த பொழுது

ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
குழந்தை பருவம்

எப்போதும்
புலம்பிக் கொண்டிருக்கும்
நகரத்து வாய்
என் கிராமத்திலே…….என்று

அங்கொன்றும் எனக்கில்லை
நின்று விடும் காலம்
இளமையுடன், என் வறுமையுடன்

பெருநகரத்தின் எறும்புகளுக்கு
ஒரு பருக்கைச் சோறு
கிடைத்துவிடுகிறது
ரொம்ப நெருங்கிலாலொழியக்
கேட்பதில்லை யாரும் ஜாதியை..

ஒரு புதிய குழந்தைப் பருவம் தேடி
தலைதெறிக்கும்
ஓட்டத்தில்,
அழுத்தவில்லை
முதுகிலிருக்கும் பாரம்.
ஒரு குரல்

யாரும் படிப்பதில்லை
நான் எழுதியதை
வார்த்தைச் சட்டங்களும்,
இலக்கிய மரபுகளும்
தெரியவில்லை எனக்கு
பஜனை மடங்களில்
தெரிந்தவர்கள் இல்லை
விக்கிரகங்களுக்கு
மண்டியிட்டதில்லை
ஆனாலும்,
நினைத்ததைச் சொல்லுவேன்

Friday, 14 August 2009

வீடு

சுற்றுச் சுவர்கட்டி,
கண்ணாடி ஜன்னல்கள் வைத்தடைத்து,
அதற்கு மேல் திரைச் சீலைகள் பொருத்தி,
ஏர்-கண்டிஷனர் வைத்துத் தடைசெய்து,
எல்லாம் செய்தும் பயனில்லை.
சிறு இடைவெளி கிடைத்தால் கூட
என் வீட்டில்
எப்படியாவது நுழைந்து விடுகிறது
காற்று
என் அனுமதியின்றி
சிறு துளியாகவேனும் தொட்டுவிடுகிறது
என் உள்ளறையை
இந்த நிலவொளி

பேயாய் அறையும் மின்விசிறியும்,
நூறுவாட்ஸ் ஒளிவிளக்கும்
பிஸ்ஸாவில் கோழியும்,
கோலாவும்
போதும் எனக்கு
இயற்கையினால் என்ன பயன் ?
ஒரு லட்சம் சம்பளமா
கிடைத்துவிடப் போகிறது?

Saturday, 8 August 2009

நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்

ஐயா, அருமைப் பெரியவரே,
நீங்கள் பெரிய புத்திசாலி
இன்னும் நிறையப்பேரும்
அதைவிட அதிகமானவர்களும்,
புத்திசாலிகள் மட்டுமல்ல,
வாழத்தெரிந்தவர்கள்.
ஏகப்பட்ட புத்தகங்களைப்
படித்து, பட்டங்களை வாங்கிக்
குவித்து விட்டீர்கள்
சொத்துக்களை வைத்திருக்கிறீர்கள்

நானும் படித்துப் பார்த்தேன்,
படிப்பு வரவில்லை
அதனாலென்ன?
நான் மனிதனில்லையா?

நான் வேண்டுமென்றே
படிக்க விரும்பவில்லைதான்
நான் முட்டாள் தான்
ஆனால் முட்டாளாக இருக்க
எனக்கு
உரிமையில்லையா?

உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
எனக்கு ஏன் தெரியவேண்டும்?
எனக்குத் தெரிந்தது ஏதாவது
உங்களுக்குத் தெரியுமா?

நான் வருத்தப்பட்டுப்
பாரத்தைச் சுமந்து, அறிவை
நெறித்துக் கொன்றவனில்லை.

ஆசிரியன் என்னை
அடிமைபோல் நடத்தினான்
.கேள்வி கேட்டால்,
சந்தேகம் கேட்டால்,
மிரட்டினான்
புத்தகத்திலிருப்பதையே
வாசித்துக் காட்டினான்
விளையாட விடாமல்
வீட்டுப் பாடம் கொடுத்தான்

செருப்புத் தைக்கும் ஃபேக்டரி
அது தானே பள்ளிக்கூடம்
ஒரே மாதிரி கையெழுத்து,
ஒரே மாதிரி மனப்பாடம்,
ஒரே மாதிரி மூளை
ஒரெ மாதிரி உலகம்
ஒரே மாதிரி ஒரேமாதிரி
புத்திசாலிகள்
==
ஆசைத் தீயிலே


புள்ளினம் நானெனப் போதையில் மிதக்கிறேன்
புதியதோர் நாடகம் போடநினைக்கிறேன்
கொள்வதில் இலக்கியக் கோடுகள் இணைக்கிறேன்
கூவ நினைக்கையில் குரலை மறக்கிறேன்
பள்ளியில் பயில்கையில் பாடநி னைத்தவன்
பருவம் வந்ததும் பாதை திரும்பினேன்
உள்ளத்தில் உள்ளதை ஒதுக்கி விட்டவன்
உலகத்தின் புயலிலே மாட்டி மயங்கினேன்

பள்ளத்தில் விழுந்து பரிதவிக்கிறேன்
பயணம் மாற நீச்சலைத் துவக்கினேன்
கொள்ளுவோர் கொள்ளலாம் குரைப்பவர் சிரிக்கலாம்
கொப்பளிக்குமென் ஆர்வத்தை ரசிக்கிறேன்
வெள்ளமாய்ப் பெருகிய வேதனை குறையலாம்
வீறு கொண்டெழும் புதிய ஊற்றிலே
அள்ள அள்ளஎன் ஆர்வம் பெருகுதே
ஆசைத் தீயிலே உலகம் ஒளிருதே

Friday, 7 August 2009

உருவமற்று ஓடும் கல்

எத்தனை முறை எழுதினாலும்
கவிதை எழுத முடிவதில்லை.
எத்தனை முறை முயன்றாலும்
ஒரு நல்ல கதையும் உருவாகவில்லை
என்ன தான் செய்தாலும்
பணத்திப் பெருக்கும் வழி
பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை
அறிவுரைகள் பல கிடைத்தாலும்,
தகிடுதத்தங்கள் கைவரவில்லை.
ஒழுங்காக வேலை செய்தால்,
அதுமட்டும் போதவில்லை
நல்லவனாய் இருப்போமே என்ற
ஆசைமட்டும் குறைவதில்லை
இருப்பதை வைத்து வாழ்வோமெனில்
உறவுகள் விடுவதில்லை
பலபல ஊர்கள் அனுபவங்கள்
பெற விரும்புகிறேன் ஆனால்
ஒரே இடத்தில் நிற்பதற்குக் கூட
ஓடிக் கொண்டிருக்கிறேன்
புத்தகங்கள் படிக்கின்ற ஆசை
தீரவில்லை
பூவுலகில் வலிகளுக்கு வழி தேடி
சிந்திப்பது நிற்கவில்லை
புத்திசாலி இல்லையென்று
நன்றாகத் தெரிகிறது
முட்டாளாய் இருக்கவே
மனம் விழைகிறது
குழப்பங்களின் மடியினில்
அசந்து உறங்குகிறேன்
பகலில் உலகை மாற்றும்
கனவுகளைக் காண்கிறேன்
மனிதர்கள் அனைவரையும்
நேசிக்க விரும்புகிறேன்
உன்னதக் காரியங்களில்
உழைக்க விரும்புகிறேன்
மஹாத்மாவாகத்தான்
மாற வேண்டுகிறேன்
மனிதனாக இருப்பதற்கே
தட்டுத் தடுமாறுகிறேன்
எதுவுமிவை கூடாமல்
இருட்டில் தவிக்கின்றேன்
நான் யாரென்று நீங்கள் சொல்ல
எதிர்பார்த்திருக்கின்றேன்

வே.ராஜகோபால்

Thursday, 30 July 2009

மிஞ்சியவை
கைகளுக்குள்ளிருந்து
நழுவிச் செல்லும்
தண்ணீர் போல வழிந்து விடுகின்றன
கனவுகள்

Wednesday, 22 July 2009

ஒரு மானுடப் பறவை

இரு சிறகுகள் விரியும்
புதுக் கனவுகள் சொரியும்

தொலைநோக்கிய விழியும்

தரைபார்க்கிற அலகும்

இரைதேக்கிடும் நகமும்

இசைபாடிடும் குரலும்

நெடுவானிடை ஏகும்

நில்லாதொரு நாளும்