Thursday, 27 August 2009
இருளைக் கண்டால்
எனக்கு பயம்
அதற்குள் என்ன
இருக்குமோ?
மறக்க முடியாத
கொடூரம்
சகிக்கமுடியாத வன்முறை
நினைக்க விரும்பாத
இழப்பு
மன்னிக்க முடியாத தவறு
இன்னும் எதுவேனும்..
ஒவ்வொரு நாளிலும்,
வாழ்விலும்,
வந்துவிடுகிறது இரவு
ஒவ்வொரு பகலிலும்
நிம்மதியின்றித் தவிக்கிறேன்
இரவை எண்ணி
ஒருபோதும் வெல்ல முடிந்ததில்லை
இருளை
ஒரு முன்னறிவிப்புமின்றி
என் அனைத்தையும் இறுக்கிச்
சூழ்ந்து விடுகிறது
எப்படியோ
விடிந்தும் விடுகிறது பிறகு
Friday, 21 August 2009
வீட்டுள் ஏ.சி.,
உடற்பயிற்சிக்கு
நடக்கும் யந்திரம்
வீட்டுள் நடக்க கார்பெட்
கால்துடைக்க மிதியடி வாசலில்
வெளியில் நடக்குமுன்
உறையோடு காலணி
வீதியில் செல்ல கார்
காரைத்திறக்க காவலன்
கண்ணிலும், காரிலும்
கறுப்புக் கண்ணாடி,
அலுவலகத்திலும் அவ்வாறே ,
எல்லாம் உள்ளேயே கிடைக்கும்
வியர்வை அறிந்ததில்லை
இருட்டைப் பார்த்ததில்லை
பசியறிந்ததில்லை
எதற்கும் ஏங்கியதில்லை
தொல்காப்பியம் முதல்
தலைவருக்கான தகுதிகள்
இவையே
Wednesday, 19 August 2009
தோற்கும் கலை
புனித இதயங்களின் நாட்டில்
யாருக்கும் பாவமன்னிப்பில்லை
பண நோட்டுகள் அரசனாகும்போது
பண்பு அதில் குறுக்கிடுவதில்லை
மானம் இறந்து விடுகிறது
வெற்று வார்த்தைகளின் காட்டில்
நுழைந்து செல்கிறோம்
அதிகபட்ச வன்முறையாளன் வாழ்கிறான்
சாக்குகள் (போலிக் காரணங்கள்)
தூசிபடிந்த புராதன காலத்தின்
கண்டுபிடிப்புகள்
நம் எல்லோருக்கும்
அவர்கள் லஞ்சம் கொடுத்துவிட்டார்கள்
யாரும் குரல் கொடுப்பதில்லை
நாம் துப்பாக்கிகளுடன் அலைகிறோம்
மேஜையின் கீழ்வரும் பணத்தை
நாம் நேசிக்கிறோம்
யாரும் புரியாதவனில்லை
அவர்கள் எல்லா உருவங்களிலும்
நிறங்களிலும் வருகிறார்கள்
மிக மோசமானவர்கள்
வெள்ளை உடை/காலரில் வருகிறார்கள்
எங்கே அரசியல் என்பது திருட்டாக
கோடீஸ்வரர்களின் பணமாக
தங்கப் பப்பாளியாக இருக்கிறதோ
அங்கே
சமூக விலங்குகள் சிங்கமாக,
சொத்துகளே இரையாக
இருக்கின்றன
நாமெல்லாம் வேட்டை விலங்குகள்
யாரும் ஒலி எழுப்புவதில்லை
நாம் துப்பாக்கிகளுடன் அலைகிறோம்
மேஜையின் கீழ்வரும் பணத்தை
நாம் நேசிக்கிறோம்
நம் எல்லோருக்கும்
அவர்கள் லஞ்சம் கொடுத்துவிட்டார்கள்
--கொலம்பியத் திரைப்படத்தில்(The art of losing) வரும் பாடல்
Monday, 17 August 2009
ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
அந்த வீட்டுத் தோட்டத்தின்
மல்லிகைப் பூக்களைத்
தொடுத்திருப்பேன்
எத்தனையோ எழுத மறந்த கவிதைகளை
காற்றில் எழுதுவேன் அப்போது
பஸ்ஸில் இடிபட்டு விழுந்து
வாயில் தார் பூசியதை
மறந்து குளிப்பேன்
நீரோடையில்
மெல்லவரும் தென்றலில்
மயிர் சிலிர்ப்பேன்
என் மருத்துவர் இன்னொரு முறை
அழைக்காத பொழுது
என் பேத்திக்கு அல்லது
அவள் மகளுக்கு
துணைஒன்று
கிடைத்த பொழுது
ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
எப்போதும்
புலம்பிக் கொண்டிருக்கும்
நகரத்து வாய்
என் கிராமத்திலே…….என்று
அங்கொன்றும் எனக்கில்லை
நின்று விடும் காலம்
இளமையுடன், என் வறுமையுடன்
பெருநகரத்தின் எறும்புகளுக்கு
ஒரு பருக்கைச் சோறு
கிடைத்துவிடுகிறது
ரொம்ப நெருங்கிலாலொழியக்
கேட்பதில்லை யாரும் ஜாதியை..
ஒரு புதிய குழந்தைப் பருவம் தேடி
தலைதெறிக்கும்
ஓட்டத்தில்,
அழுத்தவில்லை
முதுகிலிருக்கும் பாரம்.
Friday, 14 August 2009
சுற்றுச் சுவர்கட்டி,
கண்ணாடி ஜன்னல்கள் வைத்தடைத்து,
அதற்கு மேல் திரைச் சீலைகள் பொருத்தி,
ஏர்-கண்டிஷனர் வைத்துத் தடைசெய்து,
எல்லாம் செய்தும் பயனில்லை.
சிறு இடைவெளி கிடைத்தால் கூட
என் வீட்டில்
எப்படியாவது நுழைந்து விடுகிறது
காற்று
என் அனுமதியின்றி
சிறு துளியாகவேனும் தொட்டுவிடுகிறது
என் உள்ளறையை
இந்த நிலவொளி
பேயாய் அறையும் மின்விசிறியும்,
நூறுவாட்ஸ் ஒளிவிளக்கும்
பிஸ்ஸாவில் கோழியும்,
கோலாவும்
போதும் எனக்கு
இயற்கையினால் என்ன பயன் ?
ஒரு லட்சம் சம்பளமா
கிடைத்துவிடப் போகிறது?
Saturday, 8 August 2009
ஐயா, அருமைப் பெரியவரே,
நீங்கள் பெரிய புத்திசாலி
இன்னும் நிறையப்பேரும்
அதைவிட அதிகமானவர்களும்,
புத்திசாலிகள் மட்டுமல்ல,
வாழத்தெரிந்தவர்கள்.
ஏகப்பட்ட புத்தகங்களைப்
படித்து, பட்டங்களை வாங்கிக்
குவித்து விட்டீர்கள்
சொத்துக்களை வைத்திருக்கிறீர்கள்
நானும் படித்துப் பார்த்தேன்,
படிப்பு வரவில்லை
அதனாலென்ன?
நான் மனிதனில்லையா?
நான் வேண்டுமென்றே
படிக்க விரும்பவில்லைதான்
நான் முட்டாள் தான்
ஆனால் முட்டாளாக இருக்க
எனக்கு
உரிமையில்லையா?
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
எனக்கு ஏன் தெரியவேண்டும்?
எனக்குத் தெரிந்தது ஏதாவது
உங்களுக்குத் தெரியுமா?
நான் வருத்தப்பட்டுப்
பாரத்தைச் சுமந்து, அறிவை
நெறித்துக் கொன்றவனில்லை.
ஆசிரியன் என்னை
அடிமைபோல் நடத்தினான்
.கேள்வி கேட்டால்,
சந்தேகம் கேட்டால்,
மிரட்டினான்
புத்தகத்திலிருப்பதையே
வாசித்துக் காட்டினான்
விளையாட விடாமல்
வீட்டுப் பாடம் கொடுத்தான்
செருப்புத் தைக்கும் ஃபேக்டரி
அது தானே பள்ளிக்கூடம்
ஒரே மாதிரி கையெழுத்து,
ஒரே மாதிரி மனப்பாடம்,
ஒரே மாதிரி மூளை
ஒரெ மாதிரி உலகம்
ஒரே மாதிரி ஒரேமாதிரி
புத்திசாலிகள்
==
புள்ளினம் நானெனப் போதையில் மிதக்கிறேன்
புதியதோர் நாடகம் போடநினைக்கிறேன்
கொள்வதில் இலக்கியக் கோடுகள் இணைக்கிறேன்
கூவ நினைக்கையில் குரலை மறக்கிறேன்
பள்ளியில் பயில்கையில் பாடநி னைத்தவன்
பருவம் வந்ததும் பாதை திரும்பினேன்
உள்ளத்தில் உள்ளதை ஒதுக்கி விட்டவன்
உலகத்தின் புயலிலே மாட்டி மயங்கினேன்
பள்ளத்தில் விழுந்து பரிதவிக்கிறேன்
பயணம் மாற நீச்சலைத் துவக்கினேன்
கொள்ளுவோர் கொள்ளலாம் குரைப்பவர் சிரிக்கலாம்
கொப்பளிக்குமென் ஆர்வத்தை ரசிக்கிறேன்
வெள்ளமாய்ப் பெருகிய வேதனை குறையலாம்
வீறு கொண்டெழும் புதிய ஊற்றிலே
அள்ள அள்ளஎன் ஆர்வம் பெருகுதே
ஆசைத் தீயிலே உலகம் ஒளிருதே
Friday, 7 August 2009
உருவமற்று ஓடும் கல்
கவிதை எழுத முடிவதில்லை.
எத்தனை முறை முயன்றாலும்
ஒரு நல்ல கதையும் உருவாகவில்லை
என்ன தான் செய்தாலும்
பணத்திப் பெருக்கும் வழி
பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை
அறிவுரைகள் பல கிடைத்தாலும்,
தகிடுதத்தங்கள் கைவரவில்லை.
ஒழுங்காக வேலை செய்தால்,
அதுமட்டும் போதவில்லை
நல்லவனாய் இருப்போமே என்ற
ஆசைமட்டும் குறைவதில்லை
இருப்பதை வைத்து வாழ்வோமெனில்
உறவுகள் விடுவதில்லை
பலபல ஊர்கள் அனுபவங்கள்
பெற விரும்புகிறேன் ஆனால்
ஒரே இடத்தில் நிற்பதற்குக் கூட
ஓடிக் கொண்டிருக்கிறேன்
புத்தகங்கள் படிக்கின்ற ஆசை
தீரவில்லை
பூவுலகில் வலிகளுக்கு வழி தேடி
சிந்திப்பது நிற்கவில்லை
புத்திசாலி இல்லையென்று
நன்றாகத் தெரிகிறது
முட்டாளாய் இருக்கவே
மனம் விழைகிறது
குழப்பங்களின் மடியினில்
அசந்து உறங்குகிறேன்
பகலில் உலகை மாற்றும்
கனவுகளைக் காண்கிறேன்
மனிதர்கள் அனைவரையும்
நேசிக்க விரும்புகிறேன்
உன்னதக் காரியங்களில்
உழைக்க விரும்புகிறேன்
மஹாத்மாவாகத்தான்
மாற வேண்டுகிறேன்
மனிதனாக இருப்பதற்கே
தட்டுத் தடுமாறுகிறேன்
எதுவுமிவை கூடாமல்
இருட்டில் தவிக்கின்றேன்
நான் யாரென்று நீங்கள் சொல்ல
எதிர்பார்த்திருக்கின்றேன்
வே.ராஜகோபால்