Tuesday, 16 February 2010

வராத காகம்

இன்று வரவில்லை

என் வீட்டுக்கு
எப்போதும் வரும் காகம்

சோற்றுப் பருக்கைகள் காத்திருக்கின்றன சுவர் மீது
மனைவியும் அடிக்கடி பார்த்தாள்

திரும்பாமலே சென்றுவிடக்கூடும்
வருந்தாமலே வாழக் கற்றவை

ஆத்மாக்களைச் சுமந்தே
கருகிவிட்ட பறவைகள்
சேர்த்த பாவங்களை மின்கம்பிகளில் துடைக்க முயலும் போது
வெடிக்கின்றன

காகங்கள் கூடிக் கத்துகின்றன
உள்ளிருப்பது மனிதக் குரலென்றோ…

நாற்சந்தியில்

அங்கங்கே நாற்சந்தியில் நிற்கும்
இவ்வீரனை
யாருக்கும் முழுசாகத் தெரியாது
சொல்லிக் கொள்கிறார்கள் பலவிதமாய்…

வெட்கப்பட வேண்டிய கறுப்பு விஷயங்களை மறைத்து
வெண்கலச் சாயம் பூசியிருக்கிறான்

உயரமான கட்டடத்தின் மீதமர்ந்து
கூர்மையுடன் நோக்கும் ஒரு கழுகைப் போல
பார்த்துக் கொண்டிருக்கின்றான்
எதையெல்லாமோ கொத்திச் சென்றவன்

மாலைகளும் பூக்களும் வணக்கங்களும்
அவ்வப்போது உண்டு

கடவுளினும் மேலானவன்
கற்பனைக்கு எட்டாத மேதாவி

அவனை பஜனை செய்யாமல்
அந்தத் தெருவைக் கடக்க முடியாது.
பஜனைபாடிகளின் தெய்வம்
அவன் எழுதியதை யாரும் படிப்பதில்லை
படித்தபடி நடந்ததில்லை படித்தவர்கள்

சிலரின் அனுமதி இன்றி ஒரு பூவைக்கூட
அவன் மீது எறிந்துவிட முடியாது.

அவன் மனிதன் தான் இது ஜனநாயகம்தான்.

இந்த உலகம் கிடைத்தாலும் என்ன?

இந்த மாளிகைகளின், சிம்மாசனங்களின், கிரீடங்களின் உலகம்
இந்த மனிதவிரோதிகளின் சமூகங்களின் உலகம்,
சொத்துக்களின் பசியுள்ளோரின் செல்வத்துக்கான உலகம்,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் தான் என்ன?


ஒவ்வொரு இதயத்திலும் காயம்,
 ஒவ்வொரு ஆத்மாவும் தாகத்தில்,
பார்வைகளில் தவிப்பு, மனங்களில் துயரம்,
இது என்ன உலகமா? இல்லை அர்த்தமற்றவைகளின் ராஜியமா?,
 இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

எங்கு மனிதனின் ஆளூமை ஒரு பொம்மையோ
இது பிணங்களை கும்பிடுபவர் குடியிருப்பு,
 எங்கு மனிதனின் வாழ்வைவிட மரணம் விலைகுறைந்ததோ
 இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் என்ன?

இளமை சுற்றித் திரிகிறது அவநம்பிக்கைகளுடன்,
இளைய உடல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன விற்பனைக்காக,
எங்கே காதல் வியாபாரமாகிறதோ,
அந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

இந்த உலகம் இங்கே மனிதன் ஒரு பொருட்டில்லை,
உறவின் உறுதியோ, தோழமையோ ஒன்றும் இல்லை,
எங்கே காதலுக்கு ஒரு மரியாதை இல்லையோ,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

எரித்துவிடுங்கள் இதை, ஊதி அணைத்துவிடுங்கள் இந்த உலகை,
என் முன்னாலிருந்து அகற்றிவிடுங்கள் இந்த உலகை,
இந்த உலகம் உங்களுடையது அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
_______________________________________________________________________________

ப்யாசா(Pyasaa) கவிஞர் சாஹிர் லுதியான்வி,: பாடியவர் மொகம்மது ராஃபி

படத்தில் கவிஞன் நொந்து பாடும் பாடல். எப்போது கேட்டாலும் மனதை உலுக்கும் வார்த்தைகள், இசை, குரல். கடைசி வார்த்தைகளில் வர வர உச்ச ஸ்தாயிக்குச் சென்று,..குரல். சாபமாகிச் சுடும். (Pyasaa, a  film by Gurudutt)

Tuesday, 9 February 2010

பாரா முகம்

குடிகாரக் கணவனுக்காக காத்திருக்கும் இரவுகளில்
பல்லியின் மொழி புரிந்து விடுகிறது

எதிர்வீட்டுத் திரைச்சீலை
காற்றில் படபடக்க
குழந்தையின் அழுகுரலும்
அதைத் தேற்றும் ஆண்குரலும்..

மழைபொழியும் இரவுகளில்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும் வாய்ப்புண்டு

நனைந்து தெளிந்து விட்டதென
வீட்டுக்கும் கொண்டு வந்து
சேவு, மிக்ஸர் கேட்பதும் உண்டு

வாசற்படி நிலைக்குமேல்
புன்னகைக்கும் புகைப்படக் குழந்தை
அவளைப் பார்த்தே சிரிக்கிறது

அவன் ஒருநாளும்
பார்த்ததில்லை அதை

Wednesday, 3 February 2010

சாக்கடை இனம்

சென்னையின் கூவம் புறப்பட்டு விட்டது

திருப்பூர் நொய்யலைத் தொட்டு விட்டது
திருச்சியில் காவிரியைத் தந்தியாய்த் தொட்டது
வைகைக் கரையில் மாளிகை கட்டுது
தாமிர பரணிக்குத் தூது விட்டது
தென்காசி அம்பையைத் தேடுகின்றது

மொகஞ்சோ தாராவில் சாக்கடை கட்டிய
திராவிட இனத்தில்
ஊருக்கு ஊர் சாக்கடை கட்டும் திட்டமில்லை
சிங்காரப் பூங்காக்கள் அங்கங்கே சுருட்டச்
சிவில் இஞ்ஜினீயர் உண்டு
அவர்க்குச் செம்மொழி அறிவும் உண்டு

இல்லற ஜோதி

இரண்டாவது மனைவியின்
புடவை துவைத்துப் போட்டு
சமையல் செய்யும்
புண்ணியவான்
முதல் மனைவி
தட்டெடுத்து தேனீர் தராததால்
விட்டு வந்தவர்

அக்காவின் கேள்விகள்

முள்ளின் வடித்தது அக்காவின் சிலை
இறந்த போது அழக்கூட
அம்மாவோ அப்பாவோ அண்ணனோ இல்லை
அப்பா கொடுத்தனுப்பிய உள்ளத்தின் இருள்
வீட்டில் குடியிருந்தது

என் மனதில் இருக்கும் அக்காவின் கேள்விகள்
அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால்
ஏன் பெற்றாய் என்னையும் எனக்கு முன்
ஐந்து பேரையும் ?

சும்மா வந்து சுண்ணாம்பு தேய்க்க
தெருவில் இருக்கும் கல்லா நான்?

பதில் சொல்ல அப்பா இல்லை
அம்மா இல்லை
கடவுளும் இல்லை
யாரேனும் உண்டோ?

பொழுதைப் போக்குதல்

வார்த்தைகளில் நடந்தேறிய
புரட்சிகளில்
மடங்கி விழுந்தது மனிதாபிமானம்

வரிகளில் சிந்திய ரத்தத்தில்
உடலிலிருந்து வெளியேறியது
சுரணை

நடனமாடும் எல்லாச் சிலைகளிலும்
உயிரைத் தேடி
களைத்துப் போனது ஏழ்மை

யாரும் பார்க்க விரும்பவில்லை
வதையை
பொழுது போக்கவேண்டுமாம்
பூமியில்

நகரத்தின் வழியே

உருகி வழியும் தார் ரோடுகளில்
அடித்த வெய்யிலை
நிறையப்பேர் கோட்டிலும், டையிலும்
பிடித்துக் கொண்டனர்

லோடு இழுக்கும் தொழிலாளருடன்
நடந்து போகும் பள்ளிச் சிறுமியின் முதுகில்
கல்வியின் தரம் எலும்பை ஒடித்தது

கண்ணாடிப் புடவை கட்டிய
மேய்ப்பர்க் கூலிகள் நெடிதுயர்ந்து அழைக்கின்றன
இன்னும் பல ஆடுகளை
பரமண்டலத்தின் ஒத்திகையாக
புகைமண்டலம் வாகனங்கள் உபயம்

காலையில்
தள்ளாடித் தள்ளாடிக்
கீரை விற்கவரும்
எழுபது வயதுக் கிழவரின் குரலில் தெறிப்பது
மனிதாபிமானமற்ற தேசத்தின்
மரணஓலம்.
எந்த நாளும் எனக்குரியதல்ல
ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்
இருக்கின்றன நான் வாசிக்க
இசையமைத்து வைத்திருக்கிறார்கள்
நான் பாடும் பாடலை

கனவுகளில் வருகின்றன
துன்புறுத்தும் இழப்பின் கணங்கள்
தூக்கமும் எனக்குரியதல்ல
சுவற்றின் நடுவில் பதுக்கிச்
சிமெண்ட் பூசப்பட்ட செங்கல் நான்
வெளியேறிப் பார்த்தால்
என்னையே எனக்கு
அடையாளம் தெரியாது

கனவில் வாசலிலே
காத்திருக்கும் கற்பனையே
நீயும் எனக்கல்ல..

Saturday, 30 January 2010

நஞ்சுண்டன் நாடு

கழுத்தில் தேக்கிக் கொண்டான்
விஷத்தைச் சிவபெருமான்
நானோ பொடியன்
உலகிலிருக்கும் துக்கங்களையெல்லாம்
உறிஞ்சி நெஞ்சில் வைத்தேன்
மேலோர் கொஞ்சம் கொஞ்சமாக
கொடுத்த நஞ்சை
துப்ப முயன்றேன் முடியவில்லை
உடலெல்லாம் பரவிவிட்டது
மனதை எவ்வளவு தான் வெளுத்தாலும்
மற்றவர்களுக்கு என்னில்
நீலம் பாரித்த நஞ்சே தெரிகிறது
அவர்களும் நஞ்சையே உண்டவர்கள்
கண்களிலும் நஞ்சையே கொண்டவர்கள்
நஞ்சுண்டவன் நாட்டில்
தஞ்சம் கொண்டால்
மிஞ்சுவது எது?

Wednesday, 27 January 2010

இளமையில் வதை

கள்ள நோட்டுகளைப் போல
நடுவில் நுழைந்து விடுகின்றன
தவறுகளின் நினைவுகள்
கண்கள்,, மனம் கூசும்படியாக..
பதுக்கி வைத்து ரகஸியமாகக் கடத்த வேண்டியிருக்கிறது
அவற்றை..

நம்மால் துயருற்றவர்கள்
கதவுகளைத் தட்டிக்கொண்டுதானிருந்தார்கள்
வேறுமாதிரி நடந்துகொண்டிருக்கலாம்
இளமையில் நாம் இழைத்த அநீதிகளின்
துரத்தப்பட்ட நினைவுகளில்
எப்படித் தேடுவது அவர்களை?
மன்னிப்புக் கேட்க......


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நினைவு மத்தாப்புக்கள்


மறக்கவே முடியாது
பத்து வயதில் ஹாஸ்டலில்
ரொம்ப நேரம் என்முறைக்காக காத்திருந்து
என்னிடம் இல்லாத பத்துக் காசை வாங்காமலேயே
எவர்சில்வர் தட்டில் பெயர்பொறித்துக் கொடுத்து
தன்னை என் மனதில் எழுதிச் சென்ற
கைவினைஞனை

மறக்கவே முடியாது
சைக்கிள் ரிக்க்ஷாவில்
அலறிக் கொண்டு
மகனைத் தூக்கிச் சென்ற நேரம்
ஆஸ்பத்திரியில் கொண்டுவிட்டுக்
அவசரத்தில் உள்ளே போகச் சொல்லிக்
காசு வாங்க மறுத்த
மனிதனை

Friday, 22 January 2010

ஐஸ்-கிரீம்


கூடாதென்று டாக்டர் சொன்னபின்
மனைவியும் பிள்ளைகளும் மறுத்தபின்னும்
ஒதுக்கமுடியவில்லை

சிறுவயதில்
அடுத்தவர்கள்
வாங்கிச் சுவைக்க
வெறும்நாக்கைச் சப்புக்கொட்டி
வேடிக்கை பார்த்ததை

முகத்தைத் வேறுபுறம் திருப்பிக் கொண்ட
தோழர்கள் எவரும்
வாங்கித் தரமாட்டாரா
என்றேங்கியதை

ஒவ்வொரு முறையும்
ஞாபகத்தில்
உருகி வழிகிறது
பாலைஸ்

* * * * * * * * * * * * * * * ****************************************
 
 



ஒரு சின்ன நாற்காலிதான் தேவை
ஒரு சின்ன மேஜையோடு

எனக்குத் தெரிந்த மொழிகளில்,
எனக்குத் தெரியாத வரிகள்
வளைந்தோடி மயக்கும் புத்தகங்கள்
எப்போதும் நிரம்பி வழியும்
அமுதசுரபியாக இருக்கட்டுமே
அந்தச் சிறிய மேஜை

அச்சிறிய மேஜையில்
குறிப்பெடுக்க்க் காகிதங்களோ, எழுதுகோலோ
தேவையில்லை
உலகத்தின் உண்மைகள் எல்லாம்
ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன
ஆனாலும்
வாழ்க்கையின் நாடகம்
இன்னமும் இருக்கிறது
ஏராளம் ஏராளம்

நான் வரிகளில்
உணர்ச்சிகளின் கவர்ச்சி நடனத்தை நேசிக்கிறவன்
உண்மையின் நிர்வாணத்தை ரசிக்கும் பெருங்காமுகன்
மனிதர்களின் உன்னதங்களைப் பருகும் பெருங்குடிகாரன்
உலகத்தின் துயரங்களுக்காக
தன்னைச்
சிலுவையில் அறைந்துகொள்ளும்
ஒன்றும் இயலாதவன்

நான் கேட்பதொன்றும் பெரிதில்லை
ஒரு சின்ன நாற்காலியும்
புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன மேஜையும்


 

Wednesday, 20 January 2010

காணாதது


சில நேரம் பாய்ந்து செல்லும்
சிலநேரம் மனம்கனத்து நகரும்
சிலநேரம் கோடாகிச் செல்லும்
தண்ணீரைப் பார்த்து
சொல்லிக் கொண்டிருக்கும்
நதிக்கரையோரத்துப்
பாறாங்கல் ஒன்று
“எப்போதும் ஓடும் தண்ணீர் இதுவே”

பாறாங்கல்லில் மோதி உராய்ந்து
ஓடிக் கொண்டிருக்கும்
தண்ணீர்
வழியெல்லாம் சொல்லும்
“எப்போதும் நிற்கும் கல் இதுவே”

Monday, 18 January 2010

கண்களை வருடுவது


பாத்திகளுக்குள் பாய்ந்த நீர்
வேர்களைத் தேடுவதுபோல்
இருட்டுக்குள் வைத்த காலடிகள்
இன்னும் தேடுவது எதை?

காட்டுப்பன்றி நிலத்தில் கிழங்கைத்
தோண்டுவது போல
கனவுக்குள் புதைந்த வார்த்தைகளை
தோண்டி எடுப்பது எது?

விழிகள் அலைந்தலைந்து
மனம் குடைந்துகுடைந்து
சலித்துக் களைத்தபின்
மனதை வருடுவது
குழந்தைப் பருவத்திலிருந்து
பின் தொடர்ந்து வரும்
நீல வானின் நட்சத்திரங்கள்.




தொலைபேசியின் கேள்வி
கண்காணாத் தேசத்தில்
வேலைக்குச் சென்றபின்
ஆண்டுக்கொரு முறை
அப்பாவின் குரல் நேரில்
கேட்கும்

போன்பூத்துக்கு நடக்கமுடியாத
தள்ளாமையின் காலம்
வீட்டுக்குப் போன் வந்ததும்
ஒரே முறை
அரைகுறையாய்.. காது கேளாமல்..
பேசிவிட்டு அப்பா
கீழ்வைத்த ரிசிவர்
அவர் இறந்த நாளிலிருந்து…
தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது
நினைவில்
இன்னும் சிலமுறை பேசியிருக்கலாம் காசு பற்றிக் கவலையின்றி
என்று

Saturday, 9 January 2010

ஏரிக்கரை

எல்லாத் திசைகளிலிருந்தும்
வருகின்ற பறவைகள்
எல்லாத் திசைகளிலும்
காற்றில் இசைத்துச் செல்லும் காவியங்கள்


திரும்பவேண்டும் என்றே கிளம்பியவை
தங்கிவிடும் ஏரிக்கரைகளில்
மீன்கள் துள்ளிப் பாய்ந்தெழுதும்
சிறுகவிதைகளை ரசிக்க


மரங்கள் வரைந்த சிற்பங்களைக்
காற்றுத் தழுவிக் காதல்செய்யும் போது
அலைகள் எழுப்பும் சல சல
கரையில் தவமிருக்கும் கற்களை
தொட்டுவரும்


மழையின் பொழிவு
பூமியின் நெஞ்சைத் தோண்டி எடுக்கும்
உயிர்களுக்குக் கருணை வழங்க


ஒருபோதும் குறைவதில்லை
ஏரிக்கரையில் அன்பு

******************************
அவன் இன்னும்

எல்லாப் பதவிகளையும்
அலங்கரித்த பின்னும்
இன்னும்
எல்லாப் பட்டங்களைப்
பெற்ற பின்னும்
இன்னும்
கணக்கிலாச் சொத்துக்களைப்
சேர்த்தபின்னும்
இன்னும்
புத்தகங்களைப் படித்தபின்னும்
எல்லா ஞானங்களைப் பெற்ற பின்னும்
எல்லாப் பித்தங்களும்
தெளியவில்லை இன்னும்
எல்லாச் சந்தேகங்களும்
எழுகின்றன மீண்டும்
நார்ஸிஸியஸ் போல
பாறையை உருட்டிக் கொண்டு
ஏறுகிறான் மலைக்கு
மீண்டும் மீண்டும்

****************************

காதல் கவிதைகள்
எழுதிக்கொள்ளலாம்
குவிந்திருக்கும் பெண்துயரங்களையும்
ஆணின் பொசுக்கும் வக்கிரங்களையும்
கலைத்தபின்
என்றுதான் நினைத்தேன்
கூட்டுக்குள்
தீயெரிகையிலேயே தொடங்கிவிடுகிறது
காட்டுக்குள்
மனதை சமனப்படுத்தும்
மெல்லிய இசை
காத்திருக்க முடியவில்லை
ஒன்று முடிந்தபின்
இன்னொன்று என்று..

Friday, 8 January 2010

தவளையும் கற்கும்


பாம்புக்குப் பயந்து
படியேறி வெளிவந்து
இருட்டைப் பார்க்கும்
ஒரு கிணற்றுத் தவளை

வயல்வெளிக்குள்ளே
பாம்புகள் ஆயிரம் கண்டு
நீரிலும் நிலத்திலும்
தத்தித் தாவியது

கற்றுக் கொண்டுவிட்டது
கத்துவதெப்போதென்பதையும்
பாம்பின் உரித்த சட்டைகளுக்குள்
ஒளிந்து கொள்வதையும்

எங்கோ ஒரு பாம்பு
தனக்காகக் காத்திருப்பதையும்

 

Tuesday, 5 January 2010

அவஸ்தை


எனது நகரத்தின் சாலைகளில்
நெருக்கியடிக்கும் வாகனங்கள்
அவைகளின் போக்கிலே
என்னைத் தள்ளுகின்றன

வலதுபுறம் நூலகம் வரும்போது
பேருந்தொன்று மறித்துவிடுகிறது
போலிஸ்காரர் என்னை முன்னே
போகச் சொல்லுகிறார்

இடதுபுறம் இசைக்கூடம் வரும்போது
யாரோ முக்கியஸ்தருக்காக
எல்லாமே நிறுத்தப் பட்டிருக்கின்றன

நாடகத்துக்குக் கிளம்பும் மாலைகளில்
அலுவலகத்தில் இரவு தங்கவேண்டியதாகிறது
நடன நிகழ்ச்சிக்குச் சீட்டு வாங்கினாலும்
அரங்கில் நுழையமுடியாத கூட்டம்

எனது பயணங்கள் எல்லாமே
திட்டமிடப்படாதவை என்கிறாள் மனைவி

எல்லாத் திட்டங்களும் நிறைவேறாதவை
என்பதறிந்தும்….
தேசம் என்பது

பூமியின் மீது கோடுகளல்ல

தேசம் என்பது மண்ணுக்குள் இருந்து தோண்டும்
நீரல்ல

தேசம் என்பது மனதின் மீது வரைந்த வரைபடம்

தேசம் என்பது மொழியில் செதுக்கிய மெழுகுச்சிலை

தேசம் என்பது ஜனங்களுகிடையே
பாயும் ரகஸிய நதி

கொலைகாரர்களுக்கு எதிரான கவிதை

அடக்குமுறைக்கு எதிரான கொடி

விண்வெளியில் இருவர் சேர்ந்தாலும்
கடலுள்ளே மறைந்தாலும்
நினைவை நிரப்பும் காற்று

எளிதில் வெட்டப்படும் செடி

எப்படியும் எழுந்துவிடும்
கண்ணில்படாத பாறை…

தேசம் என்பது……

 
 
 
கிராமத்தை விட்டுச் செல்லும்

இரட்டையடிச் சாலையோரத்தில்
காத்திருக்கும் ஊமத்தைச் செடி
காலடியில் பட இதழ்விரித்திருக்கும்
நெருஞ்சி
ஆலமரத்தின் பெருநிழல்
பச்சைக் குளத்தின் சில மீன்கள்
டயர்கள் சுழலும் வேகத்தில்
கால்கள் வருவதில்லை அங்கு
நூலகத்தின் அமைதியில்


எங்கிருந்தோ வரும்

மெல்லிய டக் டக் ஒலியில்

மீண்டும் மீண்டும்

ஞாபகம் வருகிறது

கதைக்குள்ளிருந்து

குதித்தோடிவிட்ட

சின்னக் குழந்தையின்

காலடி
எப்போதோ?


தண்ணொளியின் மென்னணைப்பில்
நான் மயங்க
யாரும் காணாமல்
என்னருகில் வாராமல்
இருபத்தி நான்காவது மாடிக்கு மேல்
என்னைத் தேடி நிற்கும்
வீறிட்டெழும் கூச்சலில்
வீட்டில் நான் நுழைய
வினாடியில் கலங்கிவிடும்
நிலவின் முகம்

இன்னும் சந்திக்கவில்லை
அந்த முழுநிலவை

 
 

Monday, 4 January 2010

என்னைத் தொடாதே


வான் கொடுத்துப்,
பூமி தள்ளிவிட,
நதி போராடித்தான் பார்க்கிறது
வளைந்தும் நெளிந்தும்
நுழைந்தும்
மனிதர்களை அடைந்துவிட


ஆடுகள்


கண்கள் பார்க்காதது போல்
இருந்துவிடுவோம்
காதுகள் கேட்காதது போல்
வாய்கள் பேசாததுபோல்
நடித்துவிடுவோம்

மேய்ப்பர்கள்
புல்விரும்பும் மந்தைகளைத் தானே
விரும்புகிறார்கள்
நண்பனின் வீட்டைக் கடக்கும் போது


நண்பனின் வீட்டைக் கடக்கும்போது
அங்கிருந்த தோட்டத்துப் பூக்களின்
மணம் வருகிறது
பூக்களை கோர்த்துக் கோர்த்து
அவன் அக்கா செய்த
பூமாலையின் நிறங்கள்
கண்ணில் எதிரொளிக்கின்றன

உள்புற வாசலில் வாடாமல்லி மட்டும்
இன்னும் இருக்கிறது

ஏதோ கோஷத்தை நம்பி
போலிசிடம் அவன் வாங்கிய அடிகள், தழும்புகள்
யாராவது அடி வாங்கும் போது ஞாபகம் வருகின்றன
என்னைப் போல் ஒரு கோழையை அவன்
ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாது

நடுகல் அல்லது
நாற்றமடிக்கும் பழையகுளம்
என் நண்பன் எதுவாக இருக்கக் கூடும்?
பெருங்காட்சி


வண்ணங்களையும்
காட்சிகளையும் உறிஞ்சிவிடும்
மரணக் கதிரின்
பேரொளி
அதனொளியில்
வாழ்வும் சாதனையும்
தாழ்வும் வேதனையும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே தோன்றும்

பெரிதினும் பெரியதாய்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லையற்ற பெருவெளி
அதன் விரிவில்
பெரியதும் சிறியதும்
அரியதும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே வரிசையில் மறையும்

எதுவும் யாரும் இருந்ததா?
என்பதே மிஞ்சும் கேள்வியாய்…