Sunday, 18 March 2012

ஒளிந்த விளக்கு
புயல்பல வந்த போதும் புதைத்துவைத் திருந்த மோகம்
துயர்பல வந்த போது துணையென நின்ற தாகம்
அயர்வுறும் போது வந்து அணைத்ததே கவிதை; இன்று
உயர்வுறத் தாளெ டுத்தால் உடன்வர மறுத்த தேனோ?

எத்தனை காத லோடு என்னிடம் வந்த உன்னை
இத்தனை நாள்ம றந்தேன் என்பதால் சினம்கொண் டாயா?
நித்தமும் நாட கங்கள் நிகழ்த்துவோம் கவிதைத் தேவே
தத்தியே னும்நீ வாவா தனைமறந் தழைக்கி றேனே

வரண்டஎன் மனப்பா லைக்குள் வாறுகால் தோண்டி நீவா
இருண்டஎன் கனவுச் சோலை எழுகிற ஒளியின் தேவா
திரண்டெழும் உன்வே கத்தில் திளைத்துநான் நீந்து வேனே
இரண்டொரு நூறு நுற்கள் எழுதுவேன் எழுது வேனே

வசதிகள் வந்த போதும், மனமதை ஏற்ப தில்லை
தசைகளில் மனதில் எங்கும் தமிழ்தமிழ் என்றே ஓசை
திசைகளும் வாழ்த்தும் வண்ணம் தீங்கதை காவி யங்கள்
இசைபட வாழ்வ தற்கே எழுகயென் மனதின் கண்ணே

ஆடிய வேஷ மெல்லாம் அடுத்தவர்க் காகத் தானே
நீடிய கனவை எந்தன் நெஞ்சிலே ஒளித்து வைத்தேன்
வாடிய பயிரைக் கண்ட வள்ளலைப் போல என்னைத்
தேடியே வருவாய் கண்ணே தெய்வமே தமிழே நீயே



No comments:

Post a Comment