Tuesday, 15 December 2015

மறுவாசகம்

நமைப்புரந்த தாய்க்குலத்தின் நலம்வாழ்க உயிர்வாழ்க
இமைப்பொழுதும் தூங்காமல் இயங்குகிற செல்வாழ்க
ஆதிமுதல் நுன்ணூயிர்கள் ஒன்றொன்றாய்ப் பெருகியதற்
கேதும் இணையில்லா இன்பப் பூமியொன்றை
ஈன்ற கதிரோனும் அதையீன்ற பால்வெளியும்
தோன்றும் புவிக்கெல்லாம் தொடங்கும் கருந்துளையும்
எண்ணிலா விண்மீன்கள், எல்லையில்லா வான்வெளிகள்  
எண்ணிலா அண்டங்கள் எத்தனையோ சூரியன்கள்
எல்லாப் பொருளுள்ளும் இயங்குகிற அணுத்துகள்கள்
ஒல்காப் பெருமுயிராய் உதித்துவந்த கோடியுயிர்
புல்லாய்ப் பூண்டாய்ப்பல் மிருகமாய் மானிடராய்
உலகைவெல்ல வந்த உயிர்க்குலத்தின் தலைமகனாய்
திலகமிட்டு நிற்கும் திங்களும் செவ்வாயும்
என்றென்றும் வாழ்க, இவற்றையெல்லாம் கண்டுசொல
அன்றன்று அவதரிக்கும் அறிஞர்கள் வாழ்க

நானே கடவுளென்றும் நாமேபே ரண்டத்தின்
தானாதி பதியென்றும் தலைநிமிர்ந்து நின்றவரின்
பேரண்டப் புளுகெல்லாம் புரட்டிப் போட்ட
பேரறிஞன் கலிலியோவின் புகழ்வாழ்க அவர்தோளின்
மீதேறி நின்றுவிசை யென்றால் ஈர்ப்புவிசைஎன்று
ஆதாரம் சொன்ன நியுட்டன் புகழ்வாழ்க
எத்தனையோ கோடி யாண்டுகளே யானாலும்
எத்தனையோ கோடியுயிர் பூமியிலே வந்தாலும்
எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ சாமிகள்
பித்தரெனப் பேசிடினும் பெருஞானப் பெருவெளியில்
நிறைந்தெங்கும் ஓளிவீசும் நித்தியப் பேரொளியாய்
வரையில்லாப் பல்லுயிகள் வளரும் முறைகண்ட
ஒருஞானி டார்வின் தத்துவமே தழைத்திருக்கும்
ஒருநாளும் அழியாத பரிணாமத் துறைவாழ்க

ஆதி ஹைட்ரஜனின் அணுஎண் ஒன்றென்றும்
ஓதிவைத்துப் பின் ஒவ்வொரு மூலகமாய்
கண்டுகொண்ட ஞானியரும் மெண்டலும் கற்பித்தார்
ஒன்றொன்றாய் மூலகங்கள் கூடிக் குலவினவே
வேதிப் பொருளின் விளைவுகளால் இவ்வுலகும்
ஆதிப் பொருளும் அதற்கடுத்த உயிர்க்குலமும்
மெல்ல வளர்ந்து பரிணாமம் பெற்றனவே

தாயின் குணமும் தந்தையின் முகவடியும்
சேயின் குணமாக சேர்ந்துவரும் விந்தையின்
ஆய்வின் வழியாக மெண்டல் அறிந்துசொன்னார்
நோயும் நொடியும்தரும் வைரசு பாக்டிரியா
டிஎன் ஏ, ஜீன்ஹைபிரிட் செல்மைட்டோக் காண்டிரியா
என்றெல்லாம் இரவுபகல் ஏதுமின்றி ஆராய்ந்து
கண்டுசொல்லும் மனிதகுலக் கடவுள்விஞ் ஞானிகளே
கடவுள் படைத்திருக்கக் கூடுமதைக் கண்டதில்லை
திடமாய்க் கண்டவரோ தேடும்விஞ்ஞானியரே
அவரின்றி இந்நாளில அணுவும் அசையாதே
முப்பத்து முக்கோடி ஒளிஆண்டுக் கப்பாலும்
எப்புறமும் முடிவின்றி இயங்குகிற பிரபஞ்சம்
இன்றுநம் கையில் இருப்பதுவோ சிலகாலம்
நன்றும், புதியதுமாய் நாமே படைப்போமே
வெற்றி தோல்வியென்று எதுவும் நமக்கில்லை
பெற்றதெல்லாம் நமைப்புரக்கும் இயற்கைதரும் கொடையல்லால்
கற்றதும் இல்லை கண்டதும் இல்லைஇதைக்
கற்றவன் கற்றவன் இதுகல்லான் கல்லானே

அறிவு பெற்றவன்பலம்

No comments:

Post a Comment